search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மை நோய்க்கு தனி வார்டு தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். குரங்கு அம்மை நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் வெளிநாட்டு பயணிகளுக்கு செய்வதை நேரில் பார்த்தார்.

    பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐரோப்பியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் முதல் தொற்று கேரள சிறுமிக்கு ஏற்பட்டது. அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த சிறுமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். முகம், கைகளில் கொப்பளங்கள் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்படுகிறது.

    சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குரங்கு அம்மை நோய் இல்லை.

    குரங்கு அம்மை நோயை கண்டுபிடிக்க ஐ.சி.எம்.ஆர். ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் ஏற்பார்கள். சென்னையில் அந்த ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

    மேலும் குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் தயார் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் இதுவரையில் தென்படவில்லை. அதனால் பதற்றம் அடைய தேவையில்லை.

    முதல்-அமைச்சர் ரொம்ப நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியதால் தங்கி இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

    ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நாசர் உள்ளிட்டவர்களுக்கு பி4, பி5 வகை கொரோனா தொற்றாகும். இது வேகமாக பரவும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

    நோய் தொற்று ஆள் பார்த்து வருவது இல்லை. உள்நாட்டு விமான நிலையத்திலும் பரிசோதனை நடத்தப்படும்.

    சென்னையில் தொற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கூடியுள்ளது. ஆனால் பெரிய அளவில் உயரவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்க கூடிய சூழல் தற்போது இல்லை. இந்த வைரஸ் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். வைரசுடன் போராடி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், இயக்குனர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.

    Next Story
    ×