search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆவின் பால் வினியோகம் தடையின்றி சீராக நடக்கிறது- அமைச்சர் நாசர் பேட்டி
    X

    ஆவின் பால் வினியோகம் தடையின்றி சீராக நடக்கிறது- அமைச்சர் நாசர் பேட்டி

    • எந்த வகையிலும் வரும் நாட்களில் பால் வினியோகம் பாதிக்காத வகையில் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம்.
    • மக்களின் தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்யப்படும்.

    சென்னை:

    பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கடந்த அக்டோபர் மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டது. அதாவது பசும்பால் லிட்டருக்கு ரூ.32-ல் இருந்து ரூ.35 -ஆகவும், எருமைப் பால் ரூ.41-ல் இருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டது.

    இந்த விலை உயர்வு போதாது என்று பால் உற்பத்தியாளர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். பால் விலையை லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆவது அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் தமிழக அரசு இதனை ஏற்கவில்லை.

    தமிழகத்தில் ஆவின் நிறுவனத்துக்கு 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலம் தினமும் சுமார் 28 லட்சம் லிட்டர் பால் வழங்குகிறார்கள். கொள்முதல் விலையை அதிகரிக்காவிட்டால் இனி பால் வழங்கமாட்டோம் என்று பால் உற்பத்தியாளர்கள் அறிவித்தனர்.

    பால் வழங்குவதை நிறுத்தும் போராட்டத்தை பால் உற்பத்தியாளர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கினார்கள். தமிழகத்தின் சில பகுதிகளில் பாலை சாலைகளில் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுப்பதற்கு பதில் தனியார் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளனர்.

    இதையடுத்து தமிழகம் முழுவதும் ஆவின் பால் வினியோகம் பாதிக்கப்படலாம் என்று அச்சுறுத்தல் எழுந்தது. ஆனால் இன்று காலை ஆவின் பால் வினியோகம் வழக்கம்போல் நடந்தது. எந்த இடத்திலும் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

    இதுதொடர்பாக பால் வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் கூறியதாவது:-

    தமிழக அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற கெட்ட நோக்கத்தில் எதிர்க்கட்சிகளில் சிலர் பால் உற்பத்தியாளர்களை போராட்டத்துக்கு தூண்டிவிட்டுள்ளனர். அவர்களை நம்பி சில பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆனால் தமிழகத்தில் இன்று எந்த ஒரு இடத்திலும் பால் வினியோகம் தடைபடவில்லை. பால் வினியோகம் பாதிப்பில்லாமல் வழக்கம்போல நடைபெற்றது. நாளையும் அதைத்தொடர்ந்து தினமும் பால் வினியோகம் தங்கு தடையின்றி வினியோகிக்கப்படும்.

    தமிழகத்தில் பால் வினியோகம் சீராக உள்ளது. எந்த வகையிலும் வரும் நாட்களில் பால் வினியோகம் பாதிக்காத வகையில் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். மக்களின் தேவைக்கேற்ப பால் கொள்முதல் செய்யப்படும்.

    பால் உற்பத்தியாளர்கள் தங்கள் கோரிக்கைகளில் பிடிவாதமாக உள்ளனர். இந்த விஷயத்தில் முதலமைச்சரின் அறிவுரைக் கேற்ப தகுந்த முடிவை அமல்படுத்துவோம்.

    இவ்வாறு அமைச்சர் சா.மு.நாசர் கூறினார்.

    இதற்கிடையே தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க மாநில தலைவர் வாழப்பாடி ராஜேந்திரன் கூறுகையில், 'பால் கொள்முதல் விலையை தமிழக அரசு உயர்த்தாவிட்டால் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களின் மூன்றடுக்கு முறையில் குழப்பம் ஏற்பட்டுவிடும்' என்று கூறினார்.

    ஆனால் இதை ஆவின் நிர்வாக இயக்குனர் சுப்பையன் மறுத்துள்ளார். அவர் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் பால் கொள் முதல் எந்த வகையிலும் பாதிக்கப்படவில்லை. இன்று (வெள்ளிக் கிழமை) தமிழகம் முழுவதும் சுமார் 29 லட்சம் லிட்டர் பால் வினியோகம் சீராக நடை பெற்றது' என்று கூறினார்.

    Next Story
    ×