என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா: 12 மூட்டை பச்சரிசி, 177 ஆடுகள் பலியிட்டு மெகா அசைவ விருந்து
    X

    ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா: 12 மூட்டை பச்சரிசி, 177 ஆடுகள் பலியிட்டு "மெகா" அசைவ விருந்து

    • பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
    • கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மலையாம்பட்டி கிராமம் போதமலை அடிவாரத்தில் உள்ள ஆலமரத்தடியில் பிரசித்தி பெற்ற மலையாள தெய்வம் பொங்களாயி அம்மன் உள்ளது. இதன் திருவிழா வருடந்தோறும் ஆடி மாதம் 2-வது ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்து வருவது வழக்கம். பொங்களாயி அம்மன் திருவிழா பூஜையில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்வர். பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

    வழக்கம்போல் இந்த ஆண்டு திருவிழா கடந்த 21-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. நேற்று பொங்களாயி அம்மன் மலர்களால் அலங்கரிக்கபட்டு இருந்தது. மேலும் மலர்களால் மலர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. வாழை, தேங்காய் குலைகள், தோரணங்கள் கட்டப்பட்டு மின் விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. நேற்று இரவு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முன்னதாக விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. பூஜைகளை நாதன் பூசாரி செய்தார்.

    பொங்களாயி அம்மனுக்கு நடந்த பூஜையில் பெண்கள் பங்கேற்கவில்லை. ஆயிரக்கணக்கான ஆண்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். அசைவ அன்னதானம் வழங்குவதற்காக 12 மூட்டை பச்சரிசியை கொண்டு பொங்கல் தயாரித்தனர்.

    அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துவதற்காக 177-க்கும் மேற்பட்ட ஆடுகளை கொண்டு வந்து பலியிட்டனர். அவ்வாறு பலியிடப்பட்ட ஆடுகளின் இறைச்சிகளை விடிய விடிய பெரிய பெரிய பாத்திரங்களில் வைத்து சமைத்தனர். அவ்வாறு சமைக்கப்பட்ட ஆட்டு இறைச்சியை பொங்கல் சாதத்துடன் விழாவிற்கு வந்திருந்தவர்களுக்கு இன்று (திங்கட் கிழமை) காலை 6 மணி முதல் வழங்கினர். கோவில் வளாகத்தில் இருந்து நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் உள்பட பொதுமக்கள் அசைவ உணவை வாங்கி சாப்பிட்டனர். இதில் ஆண்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

    இதில் வடுகம், பட்டணம், புதுப்பட்டி, ராசிபுரம், புதுப்பாளையம், ஒடுவன்குறிச்சி, வடுகம் முனியப்பம்பாளையம், சீராப்பள்ளி, நாமகிரிபேட்டை, மெட்டாலா, ஆயில்பட்டி மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் பேருக்கு மேல் அசைவ அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தர்மக்கர்த்தாக்கள் சுப்பிரமணியம், ஆனந்த், சுப்பிரமணி மற்றும் விழாக்குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×