search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை, தூத்துக்குடி விரைந்தனர்
    X

    மருத்துவ மாணவி தற்கொலை விவகாரம்: சி.பி.சி.ஐ.டி. போலீசார் சென்னை, தூத்துக்குடி விரைந்தனர்

    • நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது.

    திருவட்டார்:

    குலசேகரம் மூகாம்பிகா மருத்துவ கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடி வி.இ.ரோடு பகுதியை சேர்ந்த இவர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்தார். சம்பவத்தன்று விடுதியில் இருந்த சுகிர்தா விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி குலசேகரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கு பேராசிரியர் டாக்டர் பரமசிவம் மற்றும் பயிற்சி டாக்டர்கள் ப்ரீத்தி, ஹரீஸ் காரணம் என்று கூறியிருந்தார். அதில் டாக்டர் பரமசிவம் பாலியல் ரீதியாகவும் ப்ரீத்தி, ஹரீஸ் இருவரும் மனதளவிலும் துன்புறுத்தியதாக கூறியிருந்தார்.

    கடிதத்தை கைப்பற்றிய போலீசார் பேராசிரியர் பரமசிவம் உட்பட 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதற்கிடையில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பேராசிரியர் பரமசிவம், ஹரீஸ், ப்ரீத்தி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட பிறகும் அவர்கள் கைது செய்யப்படவில்லை.

    இதற்கு கண்டனம் தெரிவித்த அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு மாணவ-மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் டாக்டர் பரமசிவத்தை குலசேகரம் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையிலான போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கினார்கள். நேற்று மூகாம்பிகா கல்லூரிக்கு சென்ற அவர்கள் மாணவி தங்கி இருந்த அறையை பார்வையிட்டனர். பின்னர் அவரது செல்போன் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    மதியம் தொடங்கிய விசாரணை இரவு வரை நீடித்தது. இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் 2 தனிப்படை அமைத்துள்ளனர். தனிப்படை போலீசார் சென்னை மற்றும் தூத்துக்குடிக்கு விரைந்துள்ளனர்.

    தூத்துக்குடியில் உள்ள சுகிர்தாவின் தந்தை மற்றும் தாயாரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. சென்னைக்கு விரைந்துள்ள தனிப்படையினர் பயிற்சி டாக்டர் ஹரீசிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளனர். மேலும் சிறையில் அடைக்கப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுத்து விசாரிக்கவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    Next Story
    ×