search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு
    X

    மருத்துவ கல்லூரி மாணவி தற்கொலை வழக்கு: பேராசிரியர் உள்பட 3 பேர் சஸ்பெண்டு

    • மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    திருவட்டார்:

    தூத்துக்குடி வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவரின் மகள் சுகிர்தா (வயது 27). சென்னை மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படித்து முடித்த சுகிர்தா, குமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ முகாம்பிகா மருத்துவ கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த 6-ந் தேதி கல்லூரி மாணவி தனது அறையில் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வைத்து இருந்தார். அதில், பேராசிரியர் டாக்டர் பரமசிவன் தன்னை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாகவும், பயிற்சி டாக்டர்கள் ஹரிஷ், பிரித்தி ஆகிய 2 பேரும் சேர்ந்து தன்னை மனதளவில் துன்புறுத்தியதாகவும், தன் மரணத்துக்கு இவர்கள் 3 பேரும் தான் காரணம் என்று எழுதியிருந்தார்.

    இது குறித்து மாணவியின் தந்தை சிவகுமார் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். தனது மகள் சுதிர்தா மரணத்துக்கு காரணமான 3 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் அதில் உள்ள மர்மங்களை வெளியில் கொண்டு வர வேண்டும் என்று புகார் மனு கொடுத்து இருந்தார். அதன் பேரில் குலசேகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து இந்திய தண்டனை சட்டம் பிரிவு 306 கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு சம்பந்தமாக திருவட்டார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

    ஆனால் விசாரணையில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்ததை தவிர, மேல் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை. பயிற்சி டாக்டர் ஹரிஷ் தலைமறைவாக சென்னையில் இருப்பதாக தகவல் கிடைத்தது ஆனால் அவரை இங்கு கொண்டு வந்து விசாரிப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அவர் விடுமுறையில் வந்தபோது விசாரிக்கலாம் என்று போலீசார் மழுப்பலாக சென்றனர்.

    இதனால் மருத்துவ மாணவி சாவு வழக்கை சி.பி.சி.ஜ.டி.க்கு மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள், பா.ம.க., நாம் தமிழர்கட்சி, கம்யூனிஸ்ட் லெனிஸ்ட், மாதர் சங்கம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பு, முன்னாள் மாணவர் அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் மருத்துவ மாணவி சுகிர்தா மரணத்திக்கு தொடர்புடைய பேராசிரியர் பரமசிவம், பயிற்சி டாக்டர் ஹரிஷ், பிரீத்தி ஆகிய 3 பேரையும் சஸ்பெண்டு செய்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ் விசாரணை முடியும் வரை அவர்களின் மீதான இந்த நடவடிக்கை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×