search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாமல்லபுரத்தில் மாசிமக விழா- 50 ஆயிரம் இருளர்கள் குவிந்து பாரம்பரிய வழிபாடு நடத்தினர்
    X

    மாமல்லபுரத்தில் மாசிமக விழா- 50 ஆயிரம் இருளர்கள் குவிந்து பாரம்பரிய வழிபாடு நடத்தினர்

    • ஆட்டம் பாட்டத்துடன் ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டனர்.
    • இருளர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் கடற்கரையில் பழங்குடி இருளர்கள் தங்களின் குலதெய்வமான கன்னியம்மனை மாசிமக பவுர்ணமியன்று வழிபட்டு வேண்டுதல்களை நிறைவேற்ற ஆண்டுதோறும் ஒன்று கூடுவது வழக்கம்.

    இந்த ஆண்டு மாசிமக வழிபாட்டுக்காக நேற்று முன்தினம் மாமல்லபுரம் கடற்கரையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இருளர்கள் குவிந்தனர்.

    அவர்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒன்றுகூடி பாரம்பரிய முறைப்படி குலதெய்வமான கன்னியம்மனை வழிபட்டனர். நேற்று முன்தினம் திருமணம், நிச்சயம், காதுகுத்து, மொட்டையடித்தல் உள்ளிட்ட வேட்டுதல்களை செய்தனர். பின்னர் அவர்களின் பாரம்பரிய கலை விழாவால் அப்பகுதியே களைகட்டியது.

    விழாவின் நிறைவு நாளான நேற்று பக்கிங்காம் கால்வாயில் குடும்பமாக இறங்கி மீன்பிடித்தும், சந்தையில் கறி, மீன் வாங்கியும் கடலோரத்தில் அவர்கள் அமைத்திருந்த தற்காலிக சேலைக்குடிலில் அமர்ந்து சமைத்து விருந்து வைத்தனர்.

    ஏராளமான இருளர்கள் நேற்று மாலையில் அங்குள்ள சாலையோர கடைகளில் பாத்திரங்கள், பொம்மைகள், விளையாட்டு பொருட்கள், கவரிங் நகைகள், உடைகள் மற்றும் அவர்களின் வேட்டை-தொழில் ஆயுதமான கத்தி, அரிவாள், உள்ளிட்ட பொருட்களை வாங்கினர். இதனால் கடை வீதி முழுவதும் பரபரப்பாக இயங்கியது.

    இதைத்தொடர்ந்து இரவு முதல் மாமல்லபுரத்தில் இருந்து அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். இன்று காலையும் ஏராளமானோர் பஸ்களில் ஊர்களுக்கு திரும்பினர். இதனால் மாமல்லபுரம் பஸ் நிலையம் நிரம்பி வழிந்தது.

    இருளர்களின் போக்குவரத்து வசதிக்காக இன்று செங்கல்பட்டு, தாம்பரம் பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்காக தமிழக பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.2 லட்சமும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் ரூ.1 லட்சமும் நிதி ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இருளர்களின் பாரம்பரிய விழாவால் களைகட்டி இருந்த மாமல்லபுரம் கடற்கரை பகுதி இன்று சகஜநிலைக்கு திரும்பியது.

    Next Story
    ×