search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவை-தர்மபுரியை கலக்கிய மக்னா யானை உயிரிழப்பு
    X

    உயிரிழந்த மக்னா யானையை காணலாம்

    கோவை-தர்மபுரியை கலக்கிய மக்னா யானை உயிரிழப்பு

    • மக்னா யானை கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோகாலர் சரிவர வேலை செய்யவில்லை.
    • ரேடியோகாலரில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரிகள், 3 ஆண்டுகள் வரை தடையின்றி செயல்படக்கூடியவை.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வில்லோனி பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள பள்ளத்தாக்கில் ஒரு யானை இறந்து கிடந்தது.

    வனத்துறையினர் ஆய்வு செய்ததில் பள்ளத்தாக்கில் இறந்து கிடந்தது மக்னா யானை என்பது தெரியவந்தது. இந்த யானை தர்மபுரி மற்றும் கோவையை கலக்கிய யானை ஆகும்.

    தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்த 35 வயது மக்னா யானைக்கு தந்தங்கள் கிடையாது. ஆனால் ஆக்ரோஷம் மிகுந்து காணப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானை தர்மபுரி வனத்தில் இருந்து வெளியேறி பாலக்கோடு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது.

    எனவே வனத்துறையினர் மயக்கஊசி செலுத்தி அந்த யானையை பிடித்து கோவை மாவட்டத்துக்கு கொண்டு வந்தனர். ஆனைமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வரகளியாறு பகுதியில் யானை விடுவிக்கப்பட்டது.

    ஆனால் யானை மீண்டும் காட்டுப்பகுதியில் இருந்து வெளியேறி கோவை வனக்கோட்ட எல்லையில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. எனவே மக்னா யானையை மீண்டும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பது என வனத்துறையினர் முடிவு செய்தனர். கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பேரூர் நொய்யல் ஆற்றங்கரை பகுதிக்கு வந்தது. அங்கு வனத்துறை ஊழியர்கள் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

    தொடர்ந்து அந்த யானை மானாம்பள்ளி வனச்சரகத்தில் விடுவிக்கப்பட்டது. ஆனால் யானை சரளபதி கிராமத்துக்குள் புகுந்து அங்குள்ள விளைநிலங்களை சேதப்படுத்தியது. வனத்துறையினர் மக்னா யானையை மூன்றாவது தடவையாக மயக்க ஊசி செலுத்தி பிடித்து, வால்பாறை அடுத்த சின்னக்கல்லாறு வனப்பகுதியில் விடுவித்தனர்.

    இருந்தபோதிலும் அந்த காட்டு யானை மீண்டும் மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்ய ஆயத்தமாகி வந்தது. சின்னக்கல்லாறு வனப்பகுதியில் இருந்து நாகமலை வனச்சரகத்துக்கு புறப்பட்ட யானை வில்லோனி வழியாக பொள்ளாச்சியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.

    இதற்காக தான் அந்த யானை கடந்த சில நாட்களுக்கு வில்லோனி பகுதிக்கு வந்து உள்ளது. தொடர்ந்து பாறைச்சரிவில் ஏறி செல்ல முயன்றது. அப்போது அந்த யானை எதிர்பாராதவிதமாக பள்ளத்தாக்கு பகுதியில் விழுந்து படுகாயத்துடன் சம்பவ இடத்தில் பலியானது தெரிய வந்து உள்ளது.

    மக்னா யானை கழுத்தில் பொருத்தப்பட்டு இருந்த ரேடியோகாலர் சரிவர வேலை செய்யவில்லை. இதனால் அந்த யானையின் இருப்பிடத்தை எங்களால் சரிவர அறிய முடியவில்லை. மேலும் அடர்ந்த வனப்பகுதியில் யானை இருந்தால் சிக்னல்களை அறிய முடியாது.

    நாகமலை வனச்சரகத்துக்கு உட்பட்ட வில்லோனி பகுதிக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்றிருந்த மக்னா யானை, அங்குள்ள ஒரு பாறையில் ஏறி செல்ல முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக கால் இடறி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என தெரிகிறது. மக்னா யானைக்கு உடற்கூராய்வு நடத்தப்படுகிறது. அதன்பிறகுதான் அந்த யானை எப்படி உயிரிழந்தது என்பது பற்றிய விவரம் தெரிய வரும்

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மக்னா யானையை வனத்துறையினர் சரிவர கண்காணிக்கவில்லை எனவும், அதன் காரணமாக யானை இறந்துள்ளதாகவும் வன உயிரின ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    தர்மபுரி, கோவை ஆகிய 2 மாவட்டங்களில் அட்டகாசம் செய்துவந்த மக்னா யானையை வனத்துறையினர் 3 தடவை மயக்க ஊசி செலுத்தி பிடித்து உள்ளனர். அப்போது அந்த யானையின் கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

    இதன்மூலம் அந்த யானை எந்த பகுதியில் உள்ளது என்பதை வனத்துறையினர் அறிய இயலும். மேலும் ரேடியோகாலரில் பொருத்தப்பட்டு உள்ள பேட்டரிகள், 3 ஆண்டுகள் வரை தடையின்றி செயல்படக்கூடியவை.

    மக்னா யானையின் ரேடியோகாலர் கருவியில் இருந்து கடந்த சில நாட்களாக வனத்துறைக்கு சிக்னல் எதுவும் கிடைக்கவில்லை. எனவே அவர்கள் இதுகுறித்து உடனடியாக தேடுதல் வேட்டை நடத்தியிருந்தால் மக்னா யானையை உயிரோடு காப்பாற்றி இருக்க முடியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×