என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஆவடியில் 2 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது- பொதுமக்கள் கடும் அவதி
- மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது.
- கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் ஆவடி வசூல் நகர் வழியாக சென்று அயப்பாக்கம் ஏரியில் கலக்கும்.
திருநின்றவூர்:
மாண்டஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் தொடர்ந்து பலத்த மழை நீடித்து வந்தது. ஆவடியில் 17 செ.மீட்டர் வரை பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக ஆவடி நகரின் மையப்பகுதியில் உள்ள பருத்திப்பட்டு ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தொடர்ந்து ஏரிக்கு வரும் நீர் அதிகரித்ததால் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறி வருகிறது.
பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல தற்போது பொதுப்பணித்துறையின் சார்பில் ஆவடி வசந்த் நகர் வழியாக ரூ.20 கோடி மதிப்பில் கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த கால்வாய் வழியாக செல்லும் தண்ணீர் ஆவடி வசூல் நகர் வழியாக சென்று அயப்பாக்கம் ஏரியில் கலக்கும்.
இதற்கடையே கால்வாய் அமைக்கும் பணி இன்னும் முடிவடையாததால் பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் ஆவடி மாநகராட்சி 43-வார்டுக்கு உட்பட்ட வசந்தம் நகர் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது.
இதனால் அங்குள்ள சுமார் 2 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. தெருக்களிலும், சாலையிலும் தண்ணீர் வெளியேற முடியாமல் குளம்போல் தேங்கி நிற்கிறது. பொது மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
தண்ணீர் வெளியேற வழியில்லாததால் பருத்திப்பட்டு ஏரியில் இருந்து வரும் தண்ணீர் தொடர்ந்து வீடுகளை சூழ்ந்தபடி உள்ளது. தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடடினடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் ஆவடி முழுவதும் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கி நிற்கிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே சென்று வர முடியாமல் தவிக்கிறார்கள். முழங்கால் அளவு தேங்கி உள்ள தண்ணீரில் சென்று வரவேண்டிய நிலை உள்ளதாக பொது மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். ஏரி தண்ணீர் செல்லும் கால்வாய் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.