search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகிறார்கள்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு
    X

    சேலம் உருக்காலையை திட்டமிட்டு நஷ்டத்தில் இயக்குகிறார்கள்- கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

    • நாட்டிலேயே உயர்தர துருப்பிடிக்காத எக்கு தயாரிக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் சேலம் எக்கு ஆலை தான்.
    • ஆண்டுக்கு 2 லட்சம் டன்களுக்கு மேல் விற்பனை நடைபெற்றதை, சதி வேலை செய்து நஷ்டத்தில் இயங்க வைத்திருக்கிறது மோடி அரசு.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சேலம் உருக்காலையைத் தனியாருக்கு விற்பனை செய்வதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக மத்திய இரும்பு எக்கு துறை மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம் உருக்காலையின் பங்குகளை விற்பதற்கான ஏலம் தொடர்பான நடவடிக்கைகள் வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

    சேலம் உருக்காலை திட்டத்தினால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட பயன் படுத்தப்படாமல் உள்ள 3,000 ஏக்கர் நிலத்தில் சூரிய ஒளி மின்சார திட்டத்தை செயல்படுத்தினால் ஆண்டுக்கு 150 கோடி ரூபாய் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதை பயன்படுத்த தயங்குவது ஏன்?

    சேலம் பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கிய 4,000 ஏக்கர் நிலங்களை, ஓர் ஏக்கர் ரூ.5,000-க்கும் குறைவான விலையில் கொடுத்ததால் தான் சேலம் இரும்பாலை உருவானது.

    இத்தகைய பின்னணி கொண்ட சேலம் இரும்பாலையை உலகத்தரம் கொண்ட ஆலையாகத் தரம் உயர்த்துவதுதான், அந்த ஆலை அமைவதற்காக தியாகம் செய்த சேலம் மக்களுக்கு மத்திய அரசு செலுத்தும் நன்றிக் கடனாக இருக்கும்.

    உள்ளூர் நுகர்வுக்கான ஒப்பந்தங்கள் மூலம் உற்பத்தியைப் பெறுவதற்கு அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக ஜிண்டால் போன்ற தனியார் நிறுவனங்களை தங்கள் தயாரிப்புகளுக்கு நம்பியிருக்கிறது.

    நாட்டிலேயே உயர்தர துருப்பிடிக்காத எக்கு தயாரிக்கும் ஒரே பொதுத்துறை நிறுவனம் சேலம் எக்கு ஆலை தான். 2006 முதல் 2008 வரையிலான கால கட்டத்தில் சேலம் இரும்பு உருக்காலை 100 கோடி ரூபாய் வரை லாபம் ஈட்டியது.

    ஆண்டுக்கு 2 லட்சம் டன்களுக்கு மேல் விற்பனை நடைபெற்றதை, சதி வேலை செய்து நஷ்டத்தில் இயங்க வைத்திருக்கிறது மோடி அரசு.

    தனியாருக்கு 4,000 ஆயிரம் ஏக்கர் நிலத்தைத் தாரை வார்ப்பதற்காக சேலம் இரும்பு உருக்காலையை விற்பனை செய்யும் மத்திய மோடி அரசின் மக்கள் விரோத நடவடிக்கையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

    தனியாருக்கு விற்றால் அதில் பணியாற்றும் ஊழியர்கள் நிலையை சற்றும் யோசிக்காத மோடி அரசுக்கு எதிராகத் தமிழகம் ஓரணியில் திரண்டு போராடும் என்பதை எச்சரிக்கையாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×