என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ரெயில்வே தொழிற்சங்க பணிகளை 106 வயதிலும் சுறுசுறுப்பாக செய்யும் கண்ணையா
    X

    கண்ணையா லால் குப்தா

    ரெயில்வே தொழிற்சங்க பணிகளை 106 வயதிலும் சுறுசுறுப்பாக செய்யும் கண்ணையா

    • வடகிழக்கு ரெயில்வே மஸ்தூர் தொழிற்சங்கத்தின் பொது செயலாளராக 61-வது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.
    • கடந்த 1946-ம் ஆண்டு ரெயில்வேயில் சேர்ந்த கண்ணையா லால் குப்தா, தொடர்ந்து என்.இ.ஆர்.எம்.யு-வில் இணைந்தார்.

    சென்னை:

    உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணையா லால் குப்தா (வயது 106). ரெயில்வே தொழிற்சங்க நிர்வாகங்களில், 100 வயதை கடந்த நிலையிலும் இவர் மிகுந்த உத்வேகத்துடன் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

    இந்தநிலையில் தனது 106 வயதில், வடகிழக்கு ரெயில்வே மஸ்தூர் தொழிற்சங்கத்தின் (என்.இ.ஆர்.எம்.யு) பொது செயலாளராக 61-வது முறையாக கண்ணையா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

    வயது என்பது வெறும் எண் தான் என்பதை நிரூபிக்கும் வகையில் தான் கண்ணையாவின் செயல்பாடுகள் உள்ளது என்பதற்கு இதுவே சாட்சி. இதற்கிடையே என்.இ.ஆர்.எம்.யு-வின் உறுப்பினர்கள், லிம்கா சாதனை புத்தகத்திலும், கின்னஸ் புத்தகத்திலும், உலகின் மிகவும் பழமையான தொழிற்சங்கத் தலைவர் என்ற பெயரை, கண்ணையா லால் குப்தா பெறுவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர்.

    கண்ணையாவிடம், இந்த வயதிலும் உங்கள் சுறுசுறுப்பின் ரகசியம் என்ன? என்பது குறித்து கேட்டபோது, அதற்கு அவர் கூறியதாவது:-

    என் கடந்த காலத்தில் சமூக ஆர்வலர் ஜெயப்பிரகாஷ் நாராயணனுடன் ஏற்பட்ட சந்திப்பில், நான் கற்றுக்கொண்ட ஒழுக்கம், உத்வேகம் மற்றும் தார்மீக வலிமை தான் எனது சுறுசுறுப்புக்கு காரணம்.

    தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு மத்தியில் நான் இருக்கும்போது எப்போதும் உற்சாகமுடன் இருப்பதாக உணருகிறேன். 'என்.இ.ஆர்.எம்.யு அலுவலகம் தான் எனது வீடு, என்.இ.ஆர்.எம்.யு-வின் உறுப்பினர்கள் தான் எனது குடும்பம்'.

    கடந்த 1946-ம் ஆண்டு ரெயில்வேயில் சேர்ந்த கண்ணையா லால் குப்தா, தொடர்ந்து என்.இ.ஆர்.எம்.யு-வில் இணைந்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் தேர்தலில் ஒவ்வொரு ஆண்டும் அவர் தொடர்ந்து போட்டியிட்டார். பின்னர் 1981-ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகும் தொழிற்சங்க உறுப்பினர்களின் உரிமை குரலாக இருந்து வருகிறார்.

    இந்த நீண்டகால பயணத்தில் குப்தா 4 முறை பணியிலிருந்து நீக்கப்பட்டதுடன், சுமார் ஒரு மாத காலம் சிறைவாசம் அனுபவித்துள்ளார்.

    கண்ணையாவை பற்றி தொழிற்சங்க உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'அவருக்கு கூர்மையான நினைவாற்றல் உண்டு. அவர் தவறாமல் கடைபிடிக்கும் வழக்கங்களில், தினந்தோறும் அதிகாலையில் எழுந்திருப்பது, நாள் முழுவதும் வேலை செய்வது, நள்ளிரவில் தூக்கம் போன்றவற்றை கடைபிடிப்பதுடன் ஒரு நாளைக்கு 2 முறை என மசாலா இல்லாமல் பருப்புடன் சேர்த்து 2 சப்பாத்திகளை மட்டுமே சாப்பிடுவார்'' என்றார்.

    Next Story
    ×