என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

குடிபோதையில் தலைமை ஆசிரியரை தாக்கிய பிளஸ்-2 மாணவன் இடைநீக்கம்
- விக்னேஷ் குடிபோதையில் வந்து மாணவிகளை கேலி செய்வது வழக்கம்.
- காயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இதே போல பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது 17) என்பவர் பிளஸ்-2 படித்து வருகிறார். இவர் அடிக்கடி குடிபோதையில் வந்து மாணவிகளை கேலி செய்வது வழக்கம். நேற்று காலையிலும் வழக்கம்போல் குடிபோதையில் வந்தார்.
இதனை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் கண்டித்தார். அப்போது 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே சக ஆசிரியர்கள் மாணவனை கண்டித்து அனுப்பினர்.
நேற்று மாலை தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் தனது அறையில் இருந்தார். அப்போது அங்கு வந்த மாணவர் விக்னேஷ் திடீர் என தலைமை ஆசிரியரை கண்மூடித்தனமாக தாக்கினார். இதில் அவருக்கு ரத்தம் கொட்டியது. இதில் காயம் அடைந்த தலைமை ஆசிரியர் சேவியர் சந்திரசேகர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவர் மாணவர் விக்னேசை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.






