என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையை உடைத்து 281 பவுன் நகைகள் கொள்ளை- மர்ம கும்பல் கைவரிசை
    X

    கொள்ளை நடந்த நகைக்கடையை காணலாம்

    கள்ளக்குறிச்சி அருகே நகைக்கடையை உடைத்து 281 பவுன் நகைகள் கொள்ளை- மர்ம கும்பல் கைவரிசை

    • இன்று காலை நகைக்கடை திறந்துகிடப்பது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
    • கிராமப்பகுதி என்பதால் நகைக்கடைக்கு காவலாளிகள் போடப்படவில்லை.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் கள்ளக்குறிச்சி அருகே புக்கிரவாரி புதூர் கிராமத்தில் உள்ள சேலம்-கள்ளக்குறிச்சி சாலையில் ஸ்ரீகுமரன் ஸ்வர்ணமஹால் என்ற நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.

    இவர் இரவு நேரம் வியாபாரம் முடிந்ததும் கடையை மூடிவிட்டு ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கள்ளக்குறிச்சிக்கு வருவது வழக்கம்.

    இன்று அதிகாலை 2 மணி அளவில் மர்ம நபர்கள் நகைக்கடைக்கு வந்தனர். அவர்கள் நகைக்கடை முன்பு உள்ள இரும்பு கிரில்கேட்டை ஆக்‌ஷா பிளேடால் அறுத்தனர். பின்னர் நகைக்கடையின் பூட்டு மற்றும் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அதனைத்தொடர்ந்து நகைக்கடையில் உள்ள நகை பெட்டகத்தை தூக்கி சென்றனர்.

    இன்று காலை நகைக்கடை திறந்துகிடப்பது கண்டு அந்த பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அக்கம் பக்கம் உள்ளவர்கள் கடையின் உரிமையாளர் லோகநாதனுக்கு தகவல் தெரிவித்தனர். பதறிபோன லோகநாதன் உடனடியாக நகைக்கடைக்கு விரைந்தார்.

    இதுகுறித்து வரஞ்சரம் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி போலீஸ் சூப்பிரண்டு பகலவன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். கைரேகை நிபுணர்களும் நகைக்கடைக்கு வந்தனர்.

    அப்போது கடையில் இருந்த இரும்பு பெட்டகம் மாயமாகியிருந்தது. இதில் 281 பவுன் நகைகள், 30 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் கொள்ளைபோனதாக போலீசாரிடம் லோகநாதன் தெரிவித்தார். கொள்ளை போன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடியே 30 லட்சம் ஆகும்.

    இந்த தகவல் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமான மக்கள் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

    கொள்ளையர்கள் பற்றி துப்பு துலக்க மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கடையில் இருந்து வயல்வெளிக்கு ஓடி சென்றது. கொள்ளையர்கள் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவு மூலம் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    நகைக்கடையை கொள்ளையர்கள் கடந்த சில நாட்களாக நோட்டமிட்டுள்ளனர். கடைக்கு யார்? யார்? வருகிறார்கள்? எந்த நேரத்தில் கடை மூடப்படுகிறது? என்பதை கொள்ளையர்கள் கண்காணித்துள்ளனர். கிராமப்பகுதி என்பதால் நகைக்கடைக்கு காவலாளிகள் போடப்படவில்லை.

    இதனை அறிந்த கொள்ளையர்கள் தங்களது திட்டத்தை இன்று அதிகாலை துணிகரமாக நடத்தியுள்ளனர்.

    இதுகுறித்து அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

    Next Story
    ×