என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஜெயிலில் அடைக்கப்பட்ட முரளி, நாகராஜ்
புதுமாப்பிள்ளை கவுரவ கொலை- கோர்ட்டில் சரண் அடைந்த 2 பேர் சேலம் ஜெயிலில் அடைப்பு
- சரணடைந்த முரளி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது.
- சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கிருஷ்ணகிரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
கிருஷ்ணகிரியை அடுத்த கிட்டம்பட்டியை சேர்ந்தவர் ஜெகன் (வயது 25). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அவதானப்பட்டியை அடுத்த முழுக்கான்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த சங்கர் (43) என்பவரது மகள் சரண்யாவை (21) பள்ளி பருவத்தில் இருந்து காதலித்து வந்தார்.
இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும் ஜெகன் வசதி குறைவானவர் என்பதால் இவர்களது காதலுக்கு சரண்யா வீட்டில் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
கடந்த ஜனவரி மாதம் 26-ந் தேதி வீட்டை விட்டு வெளியேறிய சரண்யா, அன்றே ஜெகனை திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் கடும் எதிர்ப்பையும் மீறி மகள் திருமணம் செய்து கொண்டதால் சங்கர் ஆத்திரத்தில் இருந்தார். மகளை எப்படியாவது ஜெகனிடம் இருந்து பிரித்துவிட முயற்சி செய்தார். இது தோல்வியில் முடிந்ததால் ஜெகனை தீர்த்துக்கட்ட முடிவு செய்தார்.
இந்நிலையில், புது மாப்பிள்ளை ஜெகனை கடந்த 21-ந் தேதி மதியம் சங்கர் உள்பட சிலர், கிருஷ்ணகிரி டேம் கூட் ரோடு அருகே உள்ள சர்வீஸ் சாலையில் வழிமறித்து, அரிவாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். பின்னர் சங்கர், அன்று மாலையே கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். கோர்ட்டு உத்தரவின்பேரில் அவரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இக்கொலையில் முக்கிய குற்றவாளிகளை தேடி வரும் நிலையில் கிருஷ்ணகிரி நல்லூர் தொட்டதிம்மனஹள்ளி முத்தம்பட்டியைச் சேர்ந்த கோவிந்தன் மகன் நாகராஜ் (21), ஜிஞ்சுப்பள்ளி மில்லனப்பள்ளி பில்லக்குப்பத்தைச் சேர்ந்த முனியப்பன் மகன் முரளி (20) ஆகியோர் நேற்று சேலம் ஜே.எம்.4 கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்களை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட் யுவராஜ் உத்தரவிட்டார். இதையடுத்து 2 பேரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சரணடைந்த முரளி மீது ஏற்கனவே ஒரு கொலை வழக்கு உள்ளது. நாகராஜூம், முரளியும் நண்பர்கள் ஆவார்கள். சங்கருடன் முரளிக்கு பழக்கம் ஏற்பட்ட நிலையில், கொலை வழக்கு உள்ள நபர்தான் ஜெகனை தீர்த்துக்கட்ட வேண்டும் எனக்கூறி சங்கர் அவரை அழைத்துச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
முரளியும், நாகராஜூம் கூலிப்படையாக செயல்பட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க கிருஷ்ணகிரி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.






