என் மலர்
தமிழ்நாடு

ஐவர்பாணி தெரியாத அளவுக்கு காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை காணலாம்
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1 லட்சம் கனஅடியாக மீண்டும் அதிகரிப்பு
- காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
- நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பென்னாகரம்:
கர்நாடக மாநில பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 72,646 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 81 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதே போல் கபினி அணைக்கு வினாடிக்கு 34 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 28 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இந்த இரு அணைகளில் இருந்து இன்று காலை 6 மணி நிலவரப்படி தமிழகத்திற்கு வினாடிக்கு 1 லட்சத்து 9 ஆயிரத்து 930 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.
கர்நாடகாவில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்து தமிழகத்திற்கு திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு கூடுதலாகவும், குறைவாகவும் மாறி மாறி திறக்கப்பட்டு வருகிறது.
காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு தண்ணீர் கரைபுரண்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல்லில் இன்று 5-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் இருகரையும் தொட்டு மூழ்கடித்தப்படி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 6-வது நாளாக தடை விதித்தது.
இந்தநிலையில் நேற்று மாலை வினாடிக்கு 80 ஆயிரமாக கனஅடியாக தண்ணீர் வந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சம் கனஅடியாக மீண்டும் தண்ணீர் அதிகரித்து வந்தது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துள்ளதால் ஐவர்பாணி, சினிபால்ஸ், மெயின் அருவி உள்ளிட்ட அருவிகள் தெரியாதபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் 2 அடிக்கு மேல் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காவிரி கரையோர பகுதிகளில் உள்ள வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் தீயணைப்பு படையினர், மீட்பு படையினரும் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்தை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் படகில் சென்று அளவீடு செய்து கண்காணித்து வருகின்றனர்.