search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி மாவட்டத்தில் கன மழை- மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
    X

    கன மழைக்கு போடி போலீஸ் நிலைய காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து கிடக்கும் காட்சி.

    தேனி மாவட்டத்தில் கன மழை- மஞ்சளாறு, சோத்துப்பாறை அணைகளில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு

    • தொடர் மழை காரணமாக போடி அணைப்பிள்ளையார் அருவி, சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை சுவர் மூடியதால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக இடைவிடாது தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    தொடர் மழையினால் அறுவடைக்கு தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும் அறுவடை செய்த நெல்மணிகளை கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு செல்ல முடியாமலும் சிரமபட்டு வருகின்றனர்.

    தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 129.55 அடியாக உள்ளது. வரத்து 2346 கன அடி. திறப்பு 1300 கன அடி. இருப்பு 4600 மி.கன அடி. வைகை அணையின் நீர்மட்டம் 68.08 அடியாக உள்ளது. வரத்து 1916 கன அடி. திறப்பு 892 கன அடி. இருப்பு 5338 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 55 அடியில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாசனத்திற்கு தண்ணீர் இன்று தேக்கப்பட உள்ளது. அணைக்கு வினாடிக்கு 644 கனஅடி நீர் வருகிறது. நீர் இருப்பு 435.32 மி.கன அடியாக உள்ளது. இதேபோல் சோத்துப்பாறை அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளவை எட்டி 121.68 அடியில் உள்ளது. வரத்து 28 கன அடி. இருப்பு 92.42 மி.கன அடி.

    தொடர் மழை காரணமாக போடி அணைப்பிள்ளையார் அருவி, சுருளி, கும்பக்கரை அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    போடி மற்றும் சுற்றுப்புற பகுதியில் கடந்த 4 நாட்களாக பெய்த கன மழை காரணமாக அனைத்து மகளிர் போலீஸ் நிலைய காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. அதிஷ்டவசமாக அந்த சமயத்தில் அப்பகுதியில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அருகில் உள்ள மற்றொரு காம்பவுண்ட் சுவரும் சேதம் அடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது.

    சுவர் இடிந்து விழுந்த இடத்தில் கழிவு நீர் கால்வாய் உள்ளது. அந்த கால்வாயை சுவர் மூடியதால் கழிவு நீர் செல்ல முடியாமல் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இதனை அகற்றி கழிவு நீர் செல்ல நடவடிக்கை எடுக்கவும் சேதம் அடைந்த மற்றொரு சுவரை இடிக்கவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரியாறு 1.8, தேக்கடி 7.4, கூடலூர் 16.2, உத்தமபாளையம் 9.6, வீரபாண்டி 10, வைகை அணை 8, மஞ்சளாறு 10.6, சோத்துப்பாறை 37, ஆண்டிபட்டி 25, அரண்மனைபுதூர் 13.4, போடி 25.2, பெரியகுளம் 8 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×