என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

காலை திருமணம்... மாலையில் மரணம்... காதல் திருமணம் செய்த சென்னை என்ஜினீயர் மர்ம மரணம்
- சுரேஷ்குமார் உடை மாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை.
- காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் புது மாப்பிள்ளை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
வானூர்:
சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 30) இவர் பி.இ. முடித்து சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.
இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த கோமதி (30) என்பவருக்கும் பெரம்பலூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும்போது காதல் ஏற்பட்டது. கோமதி தற்போது கோட்டக்குப்பம் நகராட்சி ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நாளடைவில் இந்த காதல் இவர்களது வீட்டாருக்கும் தெரிய வந்தது. எனவே சுரேஷ் குமார்-கோமதியின் பெற்றோர்களின் சம்மதத்தின் பேரில் நேற்று காலை இவர்களது திருமணம் புதுவை மாநிலம் காலாப்பட்டு பகுதியில் உள்ள பாலமுருகன் கோவிலில் நடந்தது.
இதன் பின்னர் மாலையில் கோட்டக்குப்பம் தனியார் மண்டபத்தில் இவர்களது வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்தது. இந்நிலையில் மாப்பிள்ளை சுரேஷ்குமார் வீட்டார் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாக கோட்டக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் தங்க வைத்தனர்.
அப்போது சுரேஷ்குமார் உடை மாற்றி விட்டு வருவதாக கூறிவிட்டு அறைக்குள் சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர் அறைக்குள் சென்று பார்த்தனர். அப்போது சுரேஷ்குமார் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சுரேஷ் குமாரை மீட்டு புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலே சுரேஷ் குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
தகவல் அறிந்த கோட்டகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷ் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ்குமார் மர்மமான முறையில் இறந்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காலையில் திருமணம் நடைபெற்ற நிலையில் மாலையில் புது மாப்பிள்ளை இறந்தது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.






