என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோயம்பேட்டில் அரசு பஸ்சில் கண்டக்டர் "திடீர்" உயிரிழப்பு
- மணிகண்ட ராஜா தனது உறவினர்களுக்கு “புதுமனை புகுவிழா” அழைப்பிதழ் கொடுப்பதற்காக சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு சென்றார்.
- புதுமனை புகுவிழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற கண்டக்டர் திடீரென உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
போரூர்:
சென்னை பழவந்தாங்கல், பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி மணிகண்ட ராஜா (வயது 37). மாநகர பஸ் கண்டக்டர். இவர் புதிதாக கட்டியுள்ள வீட்டிற்கு விரைவில் கிரகபிரவேசம் நடக்க உள்ளது.
இதையடுத்து மணிகண்ட ராஜா தனது உறவினர்களுக்கு "புதுமனை புகுவிழா" அழைப்பிதழ் கொடுப்பதற்காக சொந்த ஊரான விக்கிரவாண்டிக்கு சென்றார். பின்னர் நேற்று இரவு அரசு பஸ் மூலம் சென்னை திரும்பினார். பெருங்களத்தூரில் இறங்க இருந்த மணிகண்ட ராஜா கோயம்பேடு பஸ் நிலையம் வந்தடைந்த பிறகும் பஸ்சின் இருக்கையில் இருந்து கீழே இறங்கவில்லை.
இதனால் சந்தேகம் அடைந்த பஸ்சின் டிரைவர் அருகில் சென்று பார்த்தபோது மணிகண்ட ராஜா இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து மணிகண்ட ராஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். புதுமனை புகுவிழா அழைப்பிதழ் கொடுக்க சென்ற பஸ் கண்டக்டர் திடீரென உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






