search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: புழல்-வேலூர் சிறைகளில் இருந்து முருகன் உள்பட 4 பேர் விடுதலை ஆகிறார்கள்
    X

    சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதிரொலி: புழல்-வேலூர் சிறைகளில் இருந்து முருகன் உள்பட 4 பேர் விடுதலை ஆகிறார்கள்

    • விடுதலையாகும் 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள்.
    • 4 பேரில் சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது கடந்த 1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் வைத்து மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார்.

    ராஜீவ்காந்தியுடன் 15 பேரும் உயிரிழந்தனர். விடுதலைப்புலிகள் அமைப்பினரே ராஜீவ் காந்தியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

    ராஜீவ் கொலை வழக்கில் 41 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வு குழு நடத்திய இந்த விசாரணையில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளில் படிப்படியாக பலரது தண்டனை குறைக்கப்பட்டது. ஆனால் பேரறிவாளன் உள்பட 7 பேரின் தூக்கு தண்டனை குறைக்கப்படாமல் இருந்தது.

    தூக்கு தண்டனையும், பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன்பிறகு நீண்ட நாட்களாக சிறையில் இருப்பதை காரணம் காட்டி தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று பேரறிவாளன் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் பேரறிவாளனை விடுதலை செய்தது.

    இதனை தொடர்ந்து நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்கக்கோரி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளையும் விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நேற்று பரபரப்பான தீர்ப்பை வழங்கியது. நளினி, முருகன், ரவிச்சந்திரன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது.

    இதன்மூலம் 31 ஆண்டுகளாக சிறையில் வாடிய 6 பேரும் சிறை வாழ்க்கையில் இருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் ஏற்கனவே விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 6 பேரும் தற்போது விடுதலை செய்யப்பட்டு இருப்பதன் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் நடத்திய சட்ட போராட்டமும் முடிவுக்கு வந்துள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் 6 பேரையும் விடுதலை செய்து சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். தமிழக அரசியல் கட்சிகள் பலவும் வரவேற்பு தெரிவித்துள்ளன. 6 பேரும் விடுதலை செய்யப்பட்டதை பல இடங்களில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இனிப்புகளும் வழங்கப்பட்டன.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகலை 6 பேரின் வழக்கறிஞர்களும் இன்று பெற்றுக்கொள்கிறார்கள். இதன் பின்னர் 6 பேரையும் விடுதலை செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

    இதைத் தொடர்ந்து இன்று மாலையில் புழல் சிறையில் இருந்து ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோரும், வேலூர் சிறையில் இருந்து முருகன், சாந்தன் ஆகியோரும் விடுதலை ஆகிறார்கள். நளினியும், ரவிச்சந்திரனும் பரோலில் வெளியே வந்து இருக்கிறார்கள்.

    நளினி வேலூரில் வசித்து வருகிறார். ரவிச்சந்திரன் மதுரை அருப்புக்கோட்டையில் வசித்து வந்தார். இவர் தற்போது விளாத்திகுளம் அருகே உள்ள சூரப்ப நாயக்கன் பட்டியில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. விடுதலைக்கான உத்தரவு வந்த பின்னர் இவர்களுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும். மற்ற 4 பேரும் சிறையில் இருந்து வெளியில் வருகிறார்கள்.

    விடுதலையாகும் 6 பேரில் முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 4 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள். இவர்கள் இலங்கைக்கு செல்வார்களா? இங்கேயே தங்கி இருப்பார்களா? என்கிற கேள்வி எழுந்திருந்தது.

    ஆனால் இவர்கள் 4 பேரில் சாந்தன் மட்டும் இலங்கை செல்ல விருப்பம் தெரிவித்துள்ளார். மற்ற 3 பேரும் தமிழகத்திலேயே தங்கி இருக்க முடிவு செய்து உள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் தங்கப்போகும் பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்து விட்டு தங்கி கொள்ளலாம் என்கிற விதி உள்ளது. இதன்படி தமிழகத்தில் மட்டும் ஆயிரக்கணக்கான இலங்கை அகதிகள் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×