search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டிரைவரை கொலை செய்து பாலாற்றில் உடல் புதைப்பு: நண்பர்கள் 4 பேர் கைது
    X

    பூவரசன், லோகேஷ், அருண், வாசுதேவன்

    டிரைவரை கொலை செய்து பாலாற்றில் உடல் புதைப்பு: நண்பர்கள் 4 பேர் கைது

    • இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.
    • போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காவேரிப்பாக்கம்:

    ராணிப்பேட்டை மாவட்டம் திருப்பாற்கடல் அருகே உள்ள அத்திப்பட்டு கிராமம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் இளவரசன் (வயது 27), டிரைவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

    இந்த நிலையில் இளவரசன் கடந்த 6-ந்தேதி வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த இளவரசனின் தாய் செல்வி(55) காவேரிப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் இளவரசனை பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்து உடலை பாலாற்றில் புதைத்ததாக, 4 பேர் வாலாஜா போலீசில் சரணடைந்தனர். அவர்களை கைது செய்தனர்.

    அத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளவரசனும், லோகேஷ் என்கிற லாலு (27), பூவரசன் (24) , வாசுதேவன் (27), அருண்குமார் (33), ஆகியோர் நண்பர்கள்.

    கடந்த ஜனவரி மாதம் நடந்த மயிலாறு திருவிழாவின்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக இவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி இரவு லோகேஷ் மற்றும் அவரது நண்பர்களான பூவரசன், வாசுதேவன், அருண்குமார் ஆகியோர் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.

    அப்போது அந்த வழியாக வந்த இளவரசனை, 4 பேரும் வழிமறித்து தகராறு செய்தனர்.

    இவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியதில், ஆத்திரமடைந்த லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து பீர் பாட்டிலால் இளவரசன் தலையில் அடித்தனர். உடைந்த பீர் பாட்டிலால் வயிறு மற்றும் பல இடங்களில் குத்தியும் கொலை செய்தனர்.

    மேலும் போலீசிடம் மாட்டிக் கொள்ளாமல் இருக்க அத்திப்பட்டு பாலாற்றிலேயே குழி தோண்டி இளவரசன் உடலை புதைத்து விட்டு வீட்டுக்கு சென்று விட்டனர்.

    காணாமல் போன இளவரசனை போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் போலீசில் நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்.

    முழுமையாக விசாரணை நடத்திய பிறகே கொலை செய்ததற்கான காரணம் தெரியும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ராணிப்பேட்டை போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி மற்றும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸரய்யா ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.

    பாலாற்றில் இளவரசன் உடல் புதைக்கப்பட்ட இடத்தை கண்டறிந்து வருவாய்த்துறை மற்றும் மருத்துவ குழு முன்னிலையில் பிணத்தை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    மேலும் கிராமத்தில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×