search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு
    X

    பட்டாசு ஆலை விபத்து: உரிமையாளர் உள்பட 2 பேர் மீது வழக்கு

    • தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது.
    • தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன.

    சிவகாசி:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த வெம்பக்கோட்டை அருகே காங்கர் செவல்பட்டி கிராமத்தில் சிவகாசியை சேர்ந்த ராஜேந்திரராஜா என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. நாக்பூர் மாநில பதிவு கொண்ட இந்த ஆலையில் 30-க்கும் மேற்பட்ட அறைகளும், அங்கு 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் வேலை பார்த்து வருகிறார்கள்.

    இந்த ஆலையில் பேன்சி ரக பட்டாசுகள் அதிக அளவில் தயாரிக்கப்பட்டு வருகிறது. நேற்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மருந்து கலவை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்தது. அந்த சமயத்தில் ஏற்பட்ட உராய்வு காரணமாக பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    இதில் கீழே தயாரித்து காய வைப்பதற்காக கொட்டப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகள் மீதும் தீ பற்றியது. அடுத்தடுத்து பரவிய தீயில் பணியில் ஈடுபட்டிருந்த லட்சுமியாபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 42), ராஜா (38) மற்றும் ஆலங்குளத்தை சேர்ந்த முத்தம்மாள் (35) ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் சிவகாசி உள்ளிட்ட இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் தடுத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் காயம் அடைந்த 3 பேரையும் மீட்டு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராஜா, கணேசன் ஆகிய இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாத விக்டோரியா பட்டாசு ஆலை உரிமையாளர் ராஜேந்திர ராஜா, எலக்ட்ரிக்கல் போர் மென் சங்கையா ஆகிய இருவர் மீதும் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு ஆலைகள் முழு வீச்சில் தயாரிப்பு பணியில் இறங்கியுள்ளன. அதேபோல் தயாரான பட்டாசுகள் குடோன்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை முறையாக கையாள மாவட்ட நிர்வாகம் சார்பில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×