என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தங்க காசு, வெள்ளி கொலுசு, ஸ்மார்ட் வாட்ச் என ஈரோடு தேர்தலில் கொட்டிய பரிசு மழை
    X

    தங்க காசு, வெள்ளி கொலுசு, ஸ்மார்ட் வாட்ச் என ஈரோடு தேர்தலில் கொட்டிய பரிசு மழை

    • அரசியல் கட்சிகள் சார்பில் 2 வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது.
    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தமிழக தேர்தல் வரலாற்றில் புதிய பார்முலாவை உருவாக்கி விட்டது.

    திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலை மிஞ்சிய அளவுக்கு பணமழை, பரிசு மழை கொட்டியது.

    தேர்தல் பிரசாரம் தொடங்கியது முதலே வாக்காளர்களை தங்கள் பக்கம் இழுக்க அரசியல் கட்சியினர் புதிய வியூகத்தை வகுத்தனர். அதன்படி வாக்காளர்களை அழைத்து சென்று ஒரே இடத்தில் தங்க வைத்து ஆடல் பாடல் நிகழ்ச்சிகளை நடத்தி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். அப்படி அழைத்து செல்லப்பட்டவர்களுக்கு போகும்போது ரூ.500 பணம், திரும்பி செல்லும்போது ரூ.500 பணம் மற்றும் மதியம் பிரியாணி ஆகியவை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில் நாளை (27-ந்தேதி) வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் கடந்த 2 நாட்களாக பண மழை, பரிசு மழை கொட்டியது. வாக்காளர்களை கவரும் வகையில் அரசியல் கட்சியினர் போட்டிபோட்டு பல்வேறு பரிசு பொருட்களும் வழங்கப்பட்டது.

    கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.2 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. மொத்த வாக்காளர்களில் 50 சதவீதம் பேருக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

    இதைப்பார்த்த மற்றொரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. சுமார் 2 லட்சம் வாக்காளர்களுக்கு ரூ.3 ஆயிரம் பணம் கிடைத்தது.

    இதற்கிடையே ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு வாக்காளர்களிடையே நிலவியதால் அவர்களை திருப்திபடுத்துவதற்காக அதை ஈடுகட்டும் வகையில் பரிசு பொருட்களை வழங்க அரசியல் கட்சியினர் முடிவு செய்தனர். அதன் பிரதிபலிப்பாக கடந்த 2 நாட்களாகவே வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    ஒரு அரசியல் கட்சி சார்பில் வாக்காளர்களுக்கு வெள்ளி டம்ளர், வெள்ளி கிண்ணம், வெள்ளி காமாட்சி அம்மன் விளக்கு, வெள்ளி குங்குமச்சிமிழ், ஸ்மார்ட் வாட்ச், வேட்டிச்சேலை, குக்கர், ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

    மற்றொரு அரசியல் கட்சி சார்பில் அகல் விளக்கு, வெள்ளி டம்ளர், வெள்ளி தட்டு, பேண்ட்-சட்டை, மிக்சி, குடம் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

    நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்த நிலையில் பல வார்டுகளில் வாக்காளர்களுக்கு அரிசி டோக்கன், காய்கறி தொகுப்பு டோக்கன் ஆகியவை வழங்கப்பட்டது. வாக்காளர்கள் அந்த அரிசி டோக்கனை குறிப்பிட்ட கடைகளில் கொடுத்து 1 மூட்டை அரிசியையும், காய்கறி கூப்பனை காய்கறி கடைகளில் கொடுத்து காய்கறி தொகுப்பையும் பெற்றுச் சென்றனர்.

    இந்த நிலையில் கச்சேரி சாலையில் உள்ள வீடுகளுக்கு 1 கிராம் தங்க நாணயம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் அன்னை சத்யா நகர், பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு தங்க மூக்குத்தி வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் குறைவாக வாக்குகள் பதிவாகும் பகுதிகளில் உள்ள வாக்காளர்களை கவருவதற்காக நேற்று ரூ.1500 மதிப்புள்ள பட்டுச்சேலைகள் வழங்கப்பட்டன. அதேபோல் ஒரு வார்டுக்கு 2 ஆயிரம் பேருக்கு என வெள்ளி கொலுசுகளும் நேற்று வினியோகிக்கப்பட்டன.

    குறைவாக ஓட்டுகள் பதிவாகும் பகுதிகளை கணக்கெடுத்து அவர்களை தங்களுக்கு ஓட்டுப்போட வரவழைப்பதற்காக அதிக அளவில் பரிசு பொருட்கள் கொடுக்கப்பட்டன.

    நேற்று புறநகர் பகுதிகளில் விடுபட்ட வாக்காளர்களுக்கு தேடி தேடிச் சென்று பணம் கொடுத்தனர். ஒவ்வொரு அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்களும் தங்கள் தகுதிக்கு ஏற்ற வகையில் பரிசு பொருட்களை வழங்கினார்கள். ஒவ்வொரு ஏரியாவுக்கும் தகுந்தபடி பரிசு பொருட்கள் வினியோகம் நடைபெற்றது.

    இந்த நிலையில் அரசியல் கட்சிகள் சார்பில் 2 வாக்குகளுக்கு மேல் உள்ள வீடுகளுக்கு ஒரு டோக்கன் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டோக்கனுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

    அது என்ன பொருள்? பணமா அல்லது பரிசு பொருளா என்பது தெரியாமல் வாக்காளர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்.

    எந்த தேர்தலிலும் இதுவரை இல்லாத வகையில் எதிர்பார்க்காத அளவுக்கு பணம், பரிசு பொருட்கள் குவிந்ததால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் இந்த இடைத்தேர்தலை மிகவும் மலைப்பாக பார்க்கிறார்கள். ஒரு வித்தியாசமான தேர்தலாகவே இதை உணருகிறார்கள்.

    அந்த வகையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்குவதற்காக மட்டும் ரூ.300 கோடி செலவிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×