search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்- வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- வேட்பு மனுதாக்கல் நாளை மறுநாள் தொடங்குகிறது

    • வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
    • வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர்களின் வாகனங்கள் 100 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விட்டு வர வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

    இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் 31-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. பிப்ரவரி 7-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். 8-ந் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும். 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

    வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சியினர் வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரிடம் வழங்க உள்ளனர். இதற்கான விரிவான ஏற்பாடு மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் செய்யப்பட்டு வருகிறது.

    அரசியல் கட்சியினர் வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர் காலை 11 மணி முதல் மதியம் 3 மணிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்யும் வரும்போது வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய வரும் அரசியல் கட்சியினர்களின் வாகனங்கள் 100 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விட்டு வர வேண்டும். அரசியல் கட்சியினர் உடன் வரும்போது கோஷங்கள் எழுப்பக்கூடாது. வேட்பு மனுத்தாக்கல் விடுமுறை நாளான 5-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற அனைத்து நாட்களிலும் தாக்கல் செய்யலாம். பொது பிரிவினர் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு டெபாசிட் தொகையாக ரூ.5 ஆயிரம் கட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தது.

    வேட்புமனுக்கள், முன்மொழிவு படிவம், தபால் கவர் உள்ளிட்ட வேட்பு மனு படிவதற்கான ஸ்டேஷனரி பொருட்கள் தேர்தல் ஆணையத்திலிருந்து நேற்று ஈரோடு மாநகராட்சி அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பொருட்கள் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தின் தேர்தல் பிரிவு அமைந்துள்ள மைய அலுவலகத்தின் 2-ம் தளத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனை பாதுகாப்பான முறையில் அறையில் வைத்து பூட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    வேட்பு மனு தாக்கல் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. வேட்பு மனுக்களை வேட்பாளர்கள் மற்றும் அவரது சார்பில் வருபவர்கள் தங்களது சுய விபரத்தை குறித்து பெற்று செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    வேட்பு மனுத்தாக்கலையொட்டி மாநகராட்சி அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×