search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோடு இடைத்தேர்தல்- வீடு வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கிய அ.தி.மு.க.வினர்
    X

    ஈரோடு இடைத்தேர்தல்- வீடு வீடாக வாக்காளர் சரி பார்க்கும் பணியை தொடங்கிய அ.தி.மு.க.வினர்

    • ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்கு தொகுதியை உள்ளடக்கி உள்ளது.
    • தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஆக விநியோகம் செய்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யார் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தி.மு.க. கூட்டணி வேட்பாளரை சமாளிக்கும் வகையில் அ.தி.மு.க. சார்பில் பலமான வேட்பாளரை நிறுத்த எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் பலரது பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

    இடைத்தேர்தல் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக ஈரோட்டில் கட்சி நிர்வாகிகள், தேர்தல் பணிக்குழு, தேர்தல் பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    அப்போது நாளை (இன்று) முதல் 3 நாட்களுக்கு கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டும் என்று கூறினார்.

    இதையடுத்து இன்று காலை முதல் அ.தி.மு.க.வினர் வீடு வீடாக வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி மாநகராட்சி பகுதியில் தொடங்கி மாநகராட்சி பகுதியிலேயே நிறைவடைகிறது.

    ஈரோடு மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் கிழக்கு தொகுதியை உள்ளடக்கி உள்ளது. அ.தி.மு.க. சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு முன்னாள் அமைச்சர் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களுடன் உள்ளூர் பொறுப்பாளர்களும் இணைந்து அந்தந்த பகுதியில் உள்ள வீடுகளில் வாக்காளர் சரிபார்க்கும் பணியை தொடங்கி உள்ளனர்.

    அ.தி.மு.க. சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி அசோகாபுரம், பி.பி.அக்ரஹாரம், கருங்கல்பாளையம், பெரியார் நகர், வீரப்பன்சத்திரம் ஆகிய 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளுக்கு வாக்குச்சாவடி வாரியாக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வீடு வீடாக வாக்காளர்கள் சரிபார்க்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

    அவர்கள் வீடு வீடாக சென்று வீட்டில் எத்தனை வாக்காளர்கள் இருக்கிறார்கள்? இறந்தவர்களின் விவரம், வெளியூரில் யாராவது தங்கி இருக்கிறார்களா உள்ளிட்ட தகவல்களை சேகரித்தனர். மேலும் வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்களின் செல்போன் எண்ணையும் வாங்கி சென்றனர்.

    இந்த பணி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்வாறு வீடு வீடாக செல்லும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும், தி.மு.க. ஆட்சியில் மக்கள் சந்திக்கும் துயரம் குறித்தும் பட்டியலிட்டு நோட்டீஸ் ஆக விநியோகம் செய்து வருகின்றனர்.

    வேட்பாளர் அறிவிப்பதற்கு முன்பே ஈரோடு கிழக்கு தொகுதியில் 30-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் முற்றுகையிட்டு தேர்தல் பணியை தொடங்கி உள்ளனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

    Next Story
    ×