search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஈரோட்டில் ருசிகரம்- ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜூ
    X

    அமைச்சர் பொன்முடி, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆகியோர் ஒரே இடத்தில் வாக்கு சேகரித்து பேசிக்கொண்ட காட்சி.

    ஈரோட்டில் ருசிகரம்- ஒரே இடத்தில் வாக்கு சேகரித்த அமைச்சர் பொன்முடி, செல்லூர் ராஜூ

    • அமைச்சர் பொன்முடி அங்கிருந்தவர்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார்.
    • செல்லூர் ராஜூ பதிலுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளதால் இறுதி கட்ட பிரசாரம் அனல் பறக்கிறது. காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 20-க்கும் மேற்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் முகாமிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து 30-க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    வாக்கு சேகரிப்பின்போது தி.மு.க. அமைச்சர்கள், அ.தி.மு.க. முன்னாள் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் சந்திக்கும் வாய்ப்பும் நடந்து வருகிறது. கொள்கை ரீதியில் வேறுபட்டிருந்தாலும் நேரில் சந்திக்கும்போது ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து செல்கின்றனர்.

    அதே போன்று நேற்று ஈரோடு கள்ளுக்கடை மேடு ஆலமரத்து தெருவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து கை சின்னத்தில் அமைச்சர் பொன்முடி அந்த பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

    அதே நேரத்தில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இரட்டை இலை சின்னத்திற்காக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதே பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்.

    பொன்முடி தனது பிரசாரத்தை முடித்துக்கொண்டு காரில் கிளம்ப சென்றபோது முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இங்குதான் பிரசாரம் செய்கிறார் என்று கட்சி நிர்வாகிகள் கூறினர். உடனடியாக அமைச்சர் பொன்முடி காரை விட்டு இறங்கி செல்லூர் ராஜூ வாக்கு சேகரிக்கும் வீட்டுக்கு சென்றார்.

    அவரைப் பார்த்ததும் செல்லூர் ராஜூ புன்சிரிப்புடன் பொன்முடியை வரவேற்றார். அப்போது ஒருவருக்கு ஒருவர் நலம் விசாரித்துக் கொண்டு சிறிது நேரம் சிரித்துப் பேசி ஒருவருக்கொருவர் கிண்டல் அடித்துக் கொண்டனர்.

    பின்னர் அமைச்சர் பொன்முடி அங்கிருந்தவர்களிடம் கை சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டார். அப்போது செல்லூர் ராஜூ தன்னிடம் கேட்காதீர்கள் அவர்களிடம் கேளுங்கள் என்று சிரித்தபடி கூறினார். உடனடியாக பொன்முடி கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்றார்.

    அப்போது செல்லூர் ராஜூவும் பதிலுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களியுங்கள் என்று கூறினார். இதனால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

    அப்போது அமைச்சர் பொன்முடி அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் அம்மா ஓட்டு போடுங்க அம்மா என்றார். அப்போது அங்கிருந்த செல்லூர் ராஜூவை பார்த்து அவரே எங்களுக்குத்தான் ஓட்டு போடுவார் என்று கூறி ஜாலியாக தட்டி கலாய்த்தார். வாக்கு கேட்க வந்த இடத்தில் தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் ஜாலியாக பேசிக்கொண்டதால் அங்கிருந்த வாக்காளர்களும் இதை ஆச்சரியமாக பார்த்து சிரித்தனர். அந்த நேரத்தில் அமைச்சர் பொன்முடி அவரது சின்னத்துக்கு வாக்களிக்காதீர்கள் கை சின்னத்துக்கு வாக்களியுங்கள் அம்மா என்று கூறி சென்றார். அப்போது மேலும் அங்கிருந்தவர்களிடம் அமைச்சர் பொன்முடி அவர் எனக்கு சொந்தக்காரர் என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு காரில் வந்த அமைச்சர் பொன்முடியிடம், செல்லூர்ராஜூ வாக்கு கேட்டு கலகலப்பை ஏற்படுத்தினார்.

    Next Story
    ×