என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதி- ஓட்டு எண்ணும் மையத்தில் 600 போலீசார் பாதுகாப்பு
- வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கியமான பகுதிகள் முழுவதும் 150-க்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் மையம் சித்தோடு ஐ.ஆர். டி.டி.பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வாக்கு எண்ணும் மையமானது மலை உச்சியில் உள்ளது. நுழைவாயில் முன்பு 100-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அலுவலர்கள், வேட்பாளர்கள், அவர்களின் முகவர்கள் அனைவரும் கடும் சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக சோதனை செய்யப்பட்டது. செல்போன் உள்ளே கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. மெட்டல் டிடெக்டர் கருவிகள் கொண்டு சோதனை நடத்தப்படுகிறது.
அதன் பின்னர் நுழைவுவாயிலில் இருந்து வாக்கு எண்ணும் மையத்திற்கு 2 கிலோ மீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது.
வாக்கு எண்ணும் மையத்திற்கு முன்பு 200-க்கும் மேற்பட்ட போலீசார், துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அங்கேயும் கடும் சோதனைக்கு பிறகு வேட்பாளரின் முகவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
வாக்கு எண்ணும் மையம் முழுவதும் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் என 600-க்கும் மேற்பட்ட போலீசார், துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதியில் முக்கியமான பகுதிகள் முழுவதும் 150-க்கும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பாதுகாப்பு பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.






