search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னையில் பரவும் போதை ஊசி கலாசாரம்... கடந்த ஆறு மாதத்தில் 6 பேர் பலி
    X

    வடசென்னையில் பரவும் போதை ஊசி கலாசாரம்... கடந்த ஆறு மாதத்தில் 6 பேர் பலி

    • அதிக போதைக்கு ஆசைப்பட்டு போதை ஊசி செலுத்திய வாலிபர் பலியான சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் நடந்து உள்ளது.
    • போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும் சதீஷால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.

    பெரம்பூர்:

    இளைஞர்கள் தற்போது விதவிதமான போதைக்கு அடிமையாகி வருகிறார்கள். பெற்றோர் மற்றும் அரசு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தியும் போதை கலாச்சாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வடசென்னை பகுதியில் இப்போது போதை ஊசி கலாசாரம் வேகமாக பரவி வருகிறது. அதிக போதைக்கு ஆசைப்பட்டு போதை ஊசி செலுத்திய வாலிபர் பலியான சம்பவம் புளியந்தோப்பு பகுதியில் நடந்து உள்ளது.

    புளியந்தோப்பு, கனகராய தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணி. இவரது மகன் சதீஷ் (வயது22). கடந்த 2 ஆண்டாக போதை ஊசி பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றும் அவரால் போதை பழக்கத்தில் இருந்து விடுபட முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை போதை ஊசி செலுத்திய சதீஷ் வீட்டில் மயங்கி கிடந்தார். அவரை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அதிக போதைக்காக சதீஷ் போதை ஊசியை கழுத்தில் செலுத்தி இருப்பது தெரிந்தது. இதனால் உடலில் சோடியம் அளவு அதிகரித்து அவர் இறந்து இருப்பது தெரிந்தது.

    இதேபோல் வடசென்னை பகுதியில் போதை ஊசிக்கு அடிமையாகும் இளைஞர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக புளியந்தோப்பு, ஓட்டேரி, பேசின்பிரிடஜ், வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, உள்ளிட்ட இடங்களில் வலி நிவாரண மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து அதனை ஊசி மூலம் நரம்புகளில் செலுத்தி வருகிறார்கள். இதனை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும் போதை கலாச்சாரத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. போதை மருந்து, மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பல் தனியாக ஆன்லைன் மற்றும் வாட்ஸ்அப்பில் குழு வைத்து செயல்பட்டு வருகிறார்கள். இதனை அவர்களை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகின்றன.

    கடந்த 6 மாதத்தில் இதுவரை போதை ஊசிக்கு 6 பேர் இறந்து உள்ளனர். இதேபோல் ஒருவரது பார்வையும் பறிபோய் உள்ளது. கடந்த மாதம் ஓட்டேரி பகுதியை சேர்ந்த இம்ரான் என்பவர் உயிரிழந்தார். அதே மாதம் 18-ந்தேதி புளியந்தோப்பை சேர்ந்த சஞ்சய் (18) என்பவர் போதை ஊசி செலுத்தியதில் பட்டாளம் மார்க்கெட் பகுதியில் இறந்து கிடந்தார். இதேபோல் ஜூன் மாதம் 14-ந்தேதி புளியந்தோப்பை சேர்ந்த கணேசன் (22) என்பவருக்கு 2 கண்களும் பாதிக்கப்பட்டது. கடந்த ஜூலை மாதம் வ.உ.சி. நகர் 2-வது தெருவை சேர்ந்த வெற்றிவேல், புளியந்தோப்பு பி.கே.காலனியை சேர்ந்த அசோக்குமார் ஆகியோரும் போதை ஊசிக்கு பலியாகி உள்ளனர்.

    இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, போதை பொருட்கள் விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது சுலபம். ஆனால் இதுபோன்ற போதை மாத்திரை, ஊசிகளை விற்பனை செய்யும் கும்பல் மற்றும் அதனை பயன்படுத்துபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது சற்று கடினமாக உள்ளது. அவர்கள் எளிதில் ஆன்லைன் மூலமாகவும், மருந்து கடைகளிலும் வாங்கிச்சென்று விடுகின்றனர். மேலும் இதற்காக ஆன்லைனில் தனி நெட்வொர்க் மற்றும் வாட்ஸ் அப் குழுக்கள் வைத்து போதை ஊசிகளை சப்ளை செய்கின்றனர். இதனால் அவர்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. வடசென்னை பகுதியில் போதை ஊசி பழக்கம் அதிக அளவில் உள்ளது. போதை ஊசி, மருந்துகள் விற்கும் கும்பலை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

    Next Story
    ×