என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சூடுபிடிக்கும் கழுதைப்பால் விற்பனை
    X
    ஆலங்குளம் பகுதியில் கழுதைப்பால் விற்பனை நடந்தபோது எடுத்த படம்.

    தென்காசி மாவட்டத்தில் கிராமப்புறங்களில் சூடுபிடிக்கும் கழுதைப்பால் விற்பனை

    • கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் இருந்து ஒரு குடும்பமானது சுமார் 6 கழுதைகளை அழைத்துக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ளனர்.
    • கழுதை பாலுக்கு மருத்துவ குணம் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.

    தென்காசி:

    பொதுவாக பச்சிளம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையிலும் அனைவரும் பசும்பால், எருமை பால் உள்ளிட்டவற்றை பருகுவார்கள். சிலர் ஆட்டுப்பால் குடிப்பார்கள்.

    ஆனால் கிராமப்புறங்களில் உள்ள வயதானவர்கள், கழுதைப்பாலை பச்சிளம் குழந்தைகளுக்கு ஒரு சங்காவது கொடுத்தால் தான் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்றும், அந்த பால் சளி, இருமல், மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகும் என்றும் கூறுவார்கள்.

    அதன்படி தங்களது குழந்தைகளுக்கு கட்டாயம் கழுதை பாலை எங்கு தேடியாவது வாங்கி கொடுத்து குடிக்கவும் வைத்து விடுவார்கள். லிட்டர் கணக்கில் அல்லாமல் ஒரு சங்கு அதிகபட்சம் 25 மில்லி என்ற அளவில் வாங்கி கொடுக்கின்றனர்.

    முன் காலங்களில் பொதி சுமப்பதற்காக அதிகமான கழுதைகள் இருந்தன. அவற்றை அதன் உரிமையாளர்கள் வாரம் ஒருமுறை தாங்கள் வசிக்கும் கிராமங்களில் உள்ள தெருக்களுக்கு அழைத்து சென்று தேவையானவர்களுக்கு அவர்கள் வீட்டின் முன்பே வைத்து பாலை கறந்து கொடுப்பார்கள். ஆனால் தற்போது கழுதைகளின் எண்ணிக்கை என்பது சொற்பமாகிவிட்டது.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக திருச்சி மாவட்டத்தில் இருந்து ஒரு குடும்பமானது சுமார் 6 கழுதைகளை அழைத்துக்கொண்டு தென்காசி மாவட்டத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் ஆலங்குளம், கடையம் மற்றும் சுரண்டை சுற்றுவட்டார கிராமங்களில் கழுதைப்பால் விற்பனை செய்து வருகின்றனர். சுமார் 320 கிலோமீட்டர் கடந்து மினி லோடுவேனில் கழுதைகளை ஏற்றிக்கொண்டு வந்து கிராமப்புறங்களில் பால் கறந்து கொடுத்து வருகின்றனர். இந்த விற்பனையானது தற்போது சூடுபிடித்துள்ளது.

    இதுகுறித்து கழுதையின் உரிமையாளரான திருச்சியை சேர்ந்த முருகன் கூறுகையில், ஒரு சங்கு கழுதைப்பால் ரூ.50-க்கு விற்பனை செய்கிறோம். ஒரு நாளைக்கு ஒரு லிட்டர் பால் விற்றுவிட்டால் ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைத்துவிடும். வாடகை, உணவு உள்ளிட்ட செலவு போக ஓரளவு வருமானம் கிடைக்கும்.

    ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தைக்கு அதிகபட்சம் 2 சங்கு கழுதைப்பால் வாங்குவார்கள். நாங்கள் 3 பேரும் தலா 2 கழுதைகளுடன் ஒவ்வொரு கிராமத்திற்கு பிரிந்து சென்று விற்பனை செய்து வருகிறோம். எனது மகனுக்கு பள்ளி விடுமுறை என்பதால் கடந்த ஒரு வாரமாக தென்காசி மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் விற்பனை செய்து அதில் வரும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறோம் என்றார்.

    இதுகுறித்து டாக்டர்கள் கூறுகையில், கழுதை பாலுக்கு மருத்துவ குணம் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை. முன்னோர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில் கிராமப்புறங்களில் கழுதை பாலை வாங்கி குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர் என்றனர்.

    Next Story
    ×