என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ஏலம் விடப்பட்டது.
பூஜையில் வைக்கப்பட்டதால் மவுசு- ஒரு தேங்காயை ரூ.66 ஆயிரத்திற்கு வாங்கிய பக்தர்
- சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது.
- பூஜிக்கப்பட்ட தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியில் பழமை வாய்ந்த சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில் கந்தசஷ்டி விழா கடந்த 7 நாட்களாக வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு முருகப்பெருமானை வழிபட்டனர்.
சூரசம்ஹாரத்தை தொடர்ந்து முருகப்பெருமானுக்கும், வள்ளி-தெய்வானைக்கும் திருக்கல்யாண வைபவம் நடத்தப்பட்டது. இதனை முன்னிட்டு சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டு முருகப்பெருமானுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன. கந்தசஷ்டி விரதம் தொடங்கிய நாளில் இருந்து திருக்கல்யாண வைபவம் வரை பூஜையில் வைக்கப்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட்டது.
கும்ப கலசத்தில் வைக்கப்பட்டிருந்த தேங்காயை செயல் அலுவலர் ஏலம் விட்டார். அதனை போடியை சேர்ந்த சுபிக்ஷா என்ற பெண் ரூ.66 ஆயிரத்திற்கு ஏலம் எடுத்தார். இதற்கு முன்பு கடந்த வருடம் இதே கோவிலில் நடந்த கந்தசஷ்டி விழாவில் பூஜையில் வைக்கப்பட்ட தேங்காய் ரூ.27 ஆயிரத்திற்கு ஒரு பக்தர் ஏலம் எடுத்தார். இதனைதொடர்ந்து கோவிலில் அதற்குரிய பணத்தை கட்டி தேங்காயை அவர் பெற்றுக்கொண்டார்.
பூஜிக்கப்பட்ட தேங்காயை வீட்டு பூஜை அறையில் வைத்தால் சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அதன்படி பூஜையில் வைக்கப்பட்ட பல்வேறு பொருட்களும் ஏலம் விடப்பட்டது. அதனை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச்சென்றனர்.






