search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு
    X

    கிரேன் விழுந்த இடத்தில் போலீசார் விசாரணை நடத்திய காட்சி

    கோவில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்த விபத்தில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வு

    • கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.
    • விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெமிலி:

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நெமிலி கீழவீதி கிராமத்தில் மாவடியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் மயிலார் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி நேற்று திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பலர் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அலகு குத்தி வந்தனர்.

    அப்போது கிரேனில் தொங்கியபடி அம்மனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் பக்தர்கள் பறந்து வந்தபோது மேடு பள்ளமான இடத்தில் நிறுத்தப்பட்டதால் திடீரென கிரேன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த கீழவீதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவர் ஜோதி பாபு (வயது 17) கீழே விழுந்து இறந்தார்.

    மேலும் நிகழ்ச்சியை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி முத்து (42) அருகே நின்று ஐஸ் வியாபாரம் செய்து கொண்டிருந்த கீழ் ஆவதம் கிராமத்தைச் சேர்ந்த பூபாலன் ஆகியோர் மீது கிரேன் விழுந்ததால் சம்பவ இடத்தில் இறந்தனர்.

    இதனைக் கண்ட அவர்களது உறவினர்கள் கதறி அழுதனர். மேலும் திருவிழா கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் திருத்தணியை சேர்ந்த கதிர் (19), பெரப்பேரியை சேர்ந்த சின்னசாமி ஒரு பெண் குழந்தை உள்பட 9 பேர் படுகாயம் அடைந்தனர். நெமிலி போலீசார் அவர்களை மீட்டு அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    இதில் கதிர், சின்னசாமி ஆகியோர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டனர்.

    இதில் சின்னசாமி இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. மற்றவர்கள் அரக்கோணத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்த விபத்து குறித்து நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிரேன் கீழே விழுந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    Next Story
    ×