search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
    X

    குற்றாலம் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

    • மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.
    • தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 67.60 அடியாக இருந்த நிலையில், இன்று மேலும் 1 அடி உயர்ந்து 68.40 அடியானது. இதேபோல் நேற்று 82.41 அடியாக இருந்த சேர்வலாறு அணை நீர்மட்டம் இன்று 83.07 அடியானது. அணைகளுக்கு வினாடிக்கு 826 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.05 அடியாக உள்ளது. இந்த அணை பகுதியில் நேற்று 6.40 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    மாஞ்சோலை வனப்பகுதியில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது. நாலுமுக்கு எஸ்டேட்டில் 8 மில்லிமீட்டரும், ஊத்து மற்றும் காக்காச்சியில் தலா 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. புறநகர் பகுதியில் நாங்குநேரி, மூலக்கரைப்பட்டி பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. மூலக்கரைப்பட்டியில் 13 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாநகர பகுதியில் லேசான சாரல் பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதேபோல் அடவிநயினார் அணை பகுதியிலும் மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருந்தது. அதிகபட்சமாக குண்டாறில் 2.8 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    குற்றாலம் ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மற்ற அருவிகளிலும் அதிக அளவில் தண்ணீர் விழுந்தது. இந்நிலையில் இன்று காலை ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு சற்று குறைந்ததால் மீண்டும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். மெயினருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டயபுரம், விளாத்திகுளம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக விளாத்திகுளம் மற்றும் ஓட்டப்பிடாரத்தில் சுமார் அரைமணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. அங்கு 23 மில்லிமீட்டர் மழை பெய்தது. வேடநத்தம், வைப்பார், எட்டயபுரத்தில் 10 மில்லிமீட்டர் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×