என் மலர்
தமிழ்நாடு

வேலூர் சத்துவாச்சாரியில் அடிபம்புடன் அமைக்கப்பட்ட சிமெண்டு கால்வாய்
வேலூரில் அடிபம்புடன் சேர்த்து கால்வாய் அமைத்த காண்ட்ராக்டர் கைது
- அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பொது சொத்தை சேதப்படுத்தியதாக மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி விஜயராகவபுரத்தில் அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் ஊழியர்களை அனுப்பி அடிபம்பை அகற்றிவிட்டு அந்த இடத்தில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
பைக், ஜீப் ஆகியவற்றை சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டதை தொடர்ந்து அடிபம்போடு சேர்த்து கால்வாய் அமைக்கப்பட்டது வேலூர் மாநகராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக பணியை செய்த காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணியை வேலூர் கலாஸ்பாளையம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த காண்ட்ராக்டர் சுரேந்திர பாபு (வயது 49) செய்துள்ளார். அவர் மீது பொது சொத்தை சேதப்படுத்தியதாக மாநகராட்சி 2-வது மண்டல உதவி கமிஷனர் செந்தில்குமரன் சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காண்ட்ராக்டர் சுரேந்திர பாபுவை கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவரை வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.