என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
- மாணவி கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே அடிக்கடி செல்போனில் பேசி வந்தார்.
- மனம் உடைந்த மாணவி கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அம்மாபேட்டை:
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப் பேட்டையைச் சேர்ந்தவர் லட்சுமணன். கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி. இவர்களுக்கு துளசிமணி (19), கீர்த்தனா (17) ஆகிய 2 மகள்களும், கவின் (14) என்ற மகனும் உள்ளனர்.
மூத்த மகள் துளசிமணி படித்து முடித்து விட்டு வீட்டில் இருந்து வருகிறார். 2-வது மகள் கீர்த்தனா நம்பியூர் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். மகன் கவின் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கீர்த்தனா நம்பியூர் அரசு மாணவிகள் தங்கும் விடுதியில் தங்கி தினமும் கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்ல விருப்பம் இல்லாமல் கீர்த்தனா வீட்டிலேயே இருந்து வந்தார்.
மாணவி கீர்த்தனா கல்லூரிக்கு செல்லாமல் வீட்டிலேயே அடிக்கடி செல்போனில் பேசி வந்தார். இதை அவரது தந்தை கண்டித்து உள்ளார். வழக்கம் போல் நேற்றும் மாணவி செல்போனில் பேசி உள்ளார். இதை பார்த்த அவரது தந்தை செல்போனை பிடுங்கிக் கொண்டு வேலைக்கு சென்று விட்டார்.
இதனால் மனம் உடைந்த மாணவி கீர்த்தனா வீட்டில் யாரும் இல்லாத போது பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மாலை 5 மணி அளவில் லட்சுமணன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டு இருந்தது. பலமுறை சத்தம் போட்டும் கதவு திறக்கப்படவில்லை.
இதனால் லட்சுமணன் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றார். அப்போது கீர்த்தனா தூக்கில் தொங்கிக் கொண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே அவரை மீட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அப்போது கீர்த்தனாவை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கீர்த்தனா உடலை அனுப்பி வைத்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






