என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: நெல்லையில் பாதிப்புகளை கண்காணிக்க 9 குழுக்கள் அமைப்பு
- கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
- 2,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் நேற்று மதியம் முதலே மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகள் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பருவமழை பாதிப்புகளை கண்காணிக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலை பாளை என்.ஜி.ஓ. காலனியில் நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடைபயிற்சியை மேற்கொண்ட கலெக்டர் கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை பாதிப்புகளை எதிர்கொண்டு சரி செய்ய நெல்லை மாவட்டத்தின் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் துணை கலெக்டர் தலைமையில் 3 பேர் கொண்ட குழுக்கள் என மொத்தம் 9 வட்டாரத்துக்கும் குழு அமைக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் பாதிப்பு ஏற்பட்டால் பொதுமக்களை தங்க வைக்க மண்டபங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தாமிரபரணி ஆற்றில் ஆழமான பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆழமான பகுதிகளுக்கு அருகே கரைகளில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் தேவையான இடங்களில் காய்ச்சல் தடுப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
கழிவுநீர் கால்வாய்களில் அடைப்புகளை சரி செய்வதற்கான நடவடிக்கைகளும் உள்ளாட்சி நிர்வாகத்தின் உதவியுடன் எடுக்கப்பட்டுள்ளது.
வணக்கம் நெல்லை என்ற செயலி மூலமாக பொதுமக்கள் பாதிப்புகளை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வரலாம். 9786566111 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலமாக பாதிப்புகளை தெரிவிக்கலாம்.
மலை கிராமங்களான மாஞ்சோலை, ஊத்து ஆகிய பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளை கண்டறிய கிராம நிர்வாக அலுவலர் அந்தஸ்திலான அதிகாரி 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியில் இருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் முடியும் வரை ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஒரு நபர் பணியில் இருப்பார். மாநகராட்சி அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது.
2,000-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள், சவுக்கு கட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் அடித்து வரப்படும் கட்டைகள் நீர் வழிப்பாதையை தடுக்காமல் இருக்க உள்ளாட்சி அமைப்புகள் மூலம் உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
என்.டி.ஆர்.அப் அதிகாரிகள் நேரடியாக நெல்லை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை எடுத்துள்ளனர்.
கல்லூரிகளில் படிக்கும் தன்னார்வலர்கள் 200 பேருக்கு பேரிடர் கால சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






