என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கஞ்சா கடத்தல் களமாகிய சென்னை மாநகர எல்லைகள்
    X

    கஞ்சா கடத்தல் களமாகிய சென்னை மாநகர எல்லைகள்

    • மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.
    • குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள்.

    சென்னை:

    மதுவில் தொடங்கி விதவிதமான வழிகளில் கிடைக்கும் போதை பொருட்களை விளையாட்டாக பயன்படுத்த தொடங்கியவர்களே இன்று அதற்கு அடிமையாகி குற்றவாளிகளாகவும் மாறிப்போய் இருக்கிறார்கள்.

    உடலுக்குள் போதைப் பொருள் சென்றுவிட்டால் நாம் சொல்வதை உடல் கேட்காது என்றும் போதை என்ன சொல்கிறதோ... அந்த வழியில் மட்டுமே உடல் இயங்கும் என்றும் போலீசார் அடிக்கடி கூறுவதுண்டு.

    அதனை உறுதிப்படுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ஏதோ ஒரு போதைப்பொருளை பயன்படுத்திய பின்னரே அதில் ஈடுபடுகிறார்கள் என்பதும் காவல்துறையினரின் கருத்தாக உள்ளது.

    இப்படி மனிதனை மிருகமாக மாற்றும் போதைப் பொருட்களில் மதுவுக்கு அடுத்து கஞ்சா பயன்படுத்துவோரின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது.

    ஒரு காலத்தில் தேனி மலைப்பகுதிகளில் இருந்தே தமிழகம் முழுவதும் கஞ்சா சப்ளை ஆனது. கஞ்சா செடிகளை அங்கேயே பயிரிட்டு அறுவடை செய்து காயவைத்து தூளாக்கி பொட்டலம் பொட்டலமாக கட்டி வெளிமாவட்டங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைத்தனர்.

    ஆனால் சமீப காலமாக தேனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் போலீஸ் பிடி இறுகியதை தொடர்ந்து கஞ்சா நடமாட்டம் தேனி மலை பகுதிகளில் குறைந்திருக்கிறது என்றே கூறுகிறார்கள்.

    இதனை ஈடுகட்டும் வகையில் ஆந்திர மாநிலத்தையும், தமிழகத்தையும் இணைக்கும் சென்னையையொட்டிய எல்லையோர பகுதிகள் கஞ்சா கடத்தல் களமாக மாறி இருக்கின்றன.

    ஆந்திர மாநிலத்தில் இருந்து டிராவல் பேக்குகளில் பயணிகள் போல பஸ்சிலேயே கஞ்சா பொட்டலங்களை கடத்தி வருகிறார்கள். கார், மோட்டார் சைக்கிள், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், ஆட்டோக்களிலும் கடத்தப்படும் கஞ்சா திருவள்ளூர் மாவட்ட எல்லையை தாண்டியே சென்னை மாநகருக்குள் கால் பதிக்கிறது.

    இந்த கஞ்சா கடத்தலை சென்னையில் காலம் காலமாக பலர் செய்து வருகிறார்கள். குறிப்பிட்ட பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனையில் பெண்களே ஈடுபடுகிறார்கள். இவர்களை காவல்துறை வட்டாரத்தில் 'கஞ்சா ராணி' என்றே அழைக்கிறார்கள்.

    அந்த சாலை மார்க்கமாக மட்டுமின்றி ஆந்திர மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் இருந்து வரும் ரெயில்கள் மூலம் கஞ்சா கடத்தப்படுகிறது. ரெயில் சென்ட்ரல் ரெயில் நிலையத்தை நெருங்கும் வேளையில் கஞ்சா கும்பல் பக்கத்து ரெயில் நிலையமான பேசின் பிரிட்ஜ் அருகே கைமாற்றி விடுவதும் நடக்கிறது.


    ரெயிலில் இருந்து கஞ்சா மூட்டைகளை வெளியில் தூக்கி வீசிவிட்டு பின்னர் சென்று அவைகளை கைப்பற்றிக்கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. சென்னை மாநகரை பொறுத்த வரையில் கஞ்சா விற்பனை அனைத்து பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக நடந்து கொண்டே இருக்கிறது.

    போலீஸ் தரப்பில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு அதிரடி நடவடிக் கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த போதிலும் கடத்தல் விற்பனை கட்டுக்குள் வராமலேயே உள்ளது. இது இன்று... நேற்றல்ல. எப்போதுமே கஞ்சா கடத்தலும் விற்பனையும் காவல்துறைக்கு கடுமையான சவாலாகவே இருந்து வருகின்றன.

    கஞ்சா கடத்தலில் பிடிபடுபவர்களில் 75 சதவீதம் பேர் இளைஞர்கள் என்பதும், இதில் பள்ளி மாணவர்கள் ஈடுபட்டு வருவதும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகவே மாறிப்போய் உள்ளது.

    கடந்த 14 மாதங்களாக திருவள்ளூர் மாவட்ட எல்லைப் பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனை மற்றும் ஆய்வில் பள்ளி மாணவர் கள் பலர் பிடிபட்டு போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளனர்.

    திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட பகுதிகளையொட்டி உள்ள இடங்களில் 24 போலீஸ் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த காவல் நிலைய எல்லைகளை தாண்டி... புழல், செங்குன்றம் வழியாகவே, கஞ்சா கடத்தல் ஆசாமிகள் பெரிய அளவில் கஞ்சா கடத்தலை அரங்கேற்றி வருகிறார்கள்.

    கடந்த 14 மாதத்தில் 164 கோடி மதிப்பிலான 1,426 கிலோ கஞ்சாவை திருவள்ளூர் மாவட்ட போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 366 வழக்குகள் போடப்பட்டு 367 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

    கஞ்சா கடத்தலில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும். இது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரங்களை போலீசார் தொடர்ந்து மேற் கொண்டு வருகிறார்கள். ஆனால் கஞ்சா விற்பனை செய்பவர்கள் அதனை கண்டுகொள்வதே இல்லை. திரும்ப திரும்ப அதே குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னையிலும் கஞ்சா வேட்டை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டதையடுத்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வாரமும் கஞ்சா வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் கிலோ கணக்கில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டும், பலர் கைது செய்யப்பட்டும் வருகிறார்கள். கஞ்சாவை சாக்லேட் வடிவிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.

    பீகாரை சேர்ந்த வாலிபர் ஒருவர் அண்ணாசாலை பகுதியில் கஞ்சா சாக்லெட்டுகளை பீடா கடையில் வைத்து விற்பனை செய்து வந்தார். அதனை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன்பு பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை போன்று கேட்டமின், ஹெராயின், யனஹண்டிரன், சீட்டிராய் டினைர் உள்ளிட்ட போதை பொருட்களும் வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்டு சென்னயில் தாராளமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    கஞ்சா பொட்டலங்களை பொறுத்த வரையில் 50 கிராம், 100 கிராம் என தனித்தனி பண்டல்களாக போட்டு விற்பனை செய்து வருகிறார்கள். சென்னையில் கல்லூரி-பள்ளி மாணவர் களுக்கிடையே சமீபகாலமாக மதுப்பழக்கத்துடன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பழக்கங்களும் அதிகரித்து காணப்படுகின்றன.

    ஆரம்பத்தில் பணத்துக்காக கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதலில் அதனை ருசிபார்க்கத் தொடங்கி பின்னர் அதற்கு அடிமையாகிவிடுகிறார்கள். இதுபோன்று கஞ்சா போதைக்கு அடிமையாகும் மாணவர்கள்தான் இளம் வயதிலேயே செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட குற்றங் களில் தொடங்கி பின்னர் பெரிய 'தாதா' நிலைக்கு சென்றுவிடும் ஆபத்தும் உள்ளது.

    இதுபோன்ற இளம் குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களை நல்வழிப்படுத்த போலீசார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கு பலன் கிடைத்தாலும் பலர் கட்டுக்கடங்காமல் எல்லை மீறி போகும் சூழலும் நிலவுகிறது.

    இப்படி இளம் தலை முறையினரிடையே புற்று நோய்போல பரவி கிடக்கும் போதை பழக்கம் அவர் களிடம் இருந்து எப்படி விலகப்போகிறது? என்பது விடை தெரியாத கேள்வி யாகவே மாறி இருக்கிறது என்றால் அது மிகையல்ல.

    Next Story
    ×