search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை
    X

    பேராசிரியர் பரமசிவம்

    மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பேராசிரியரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

    • சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர்.
    • அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் உள்ள மூகாம்பிகா மருத்துவக் கல்லூரியில் முதுகலை மருத்துவம் படித்து வந்தவர் சுகிர்தா (வயது 27). தூத்துக்குடியை சேர்ந்த இவர், கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

    இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி மாணவி சுகிர்தா, விடுதி அறையில் ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவல் கிடைத்ததும் குலசேகரம் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அப்போது அறையில் சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

    அந்த கடிதத்தில், கல்லூரி பேராசிரியர் பரமசிவம் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், சீனியர் மாணவர் ஹரீஷ், மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் தொந்தரவு கொடுத்ததாகவும் சுகிர்தா குறிப்பிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் 3 பேர் மீதும் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    இந்த வழக்கில் 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனுவும் கொடுக்கப்பட்டது. இதற்கிடையில் விசாரணையை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்று சுகிர்தாவின் தந்தை சிவகுமார் மற்றும் பலர் வலியுறுத்தினர்.

    இந்த நிலையில் கடந்த 13-ந்தேதி பேராசிரியர் பரமசிவம் கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். இந்த நிலையில் வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டது. இதனை தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜ்குமார், இன்ஸ்பெக்டர் பார்வதி ஆகியோர் விசாரணையை தொடங்கினர். அவர்கள் மூகாம்பிகா மருத்துவ கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    சுகிர்தா தற்கொலை செய்த விடுதி அறையை பார்த்த அவர்கள், சக மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்தினர், பேராசிரியர்கள் போன்றோரிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு விவரம் சேகரித்தனர். தொடர்ந்து சிறையில் இருக்கும் பேராசிரியர் பரமசிவம் மற்றும் முன்ஜாமீன் பெற்றுள்ள ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டனர்.

    இதற்காக பேராசிரியர் பரமசிவத்தை காவலில் எடுக்க வேண்டி, நாகர்கோவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அவரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தனர். இந்த மனு நேற்று மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணைக்காக பாளையங்கோட்டை சிறையில் இருந்து பேராசிரியர் பரமசிவத்தை போலீசார் அழைத்து வந்திருந்தனர். சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட்டு விஜயலட்சுமி, ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து சி.பி.சிஐ.டி. போலீசார், பேராசிரியர் பரமசிவத்தை விசாரணைக்காக தங்கள் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவரிடம் இன்ஸ்பெக்டர் பார்வதி தலைமையில் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதத்தை காண்பித்து போலீசார் விசாரித்தனர். ஆனால் பேராசிரியர் பரமசிவம், தனக்கும், இதற்கும் தொடர்பு இல்லை என்று கூறியதாக தெரிகிறது.

    இன்று காலையும் அவரிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்கள் விசாரணையை தொடங்கினர். பேராசிரியர் பரமசிவத்தை குலசேகரம் மூகாம்பிகா மருத்துவக் கல்லூரிக்கு அழைத்து சென்றும் விசாரணை நடத்தினர். பிறகு மாலையில் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அடுத்த கட்டமாக பயிற்சி மாணவர்கள் ஹரீஷ், ப்ரீத்தி ஆகியோரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவர சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்காக விசாரணைக்கு ஆஜராகும்படி 2 பேருக்கும் சம்மன் அனுப்பப்படுகிறது.

    Next Story
    ×