search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்
    X

    காவேரி கூக்குரல் மூலம் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் நட திட்டம்

    • இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன
    • காவேரி கூக்குரல் இயக்க களப் பணியாளர்கள் விவசாயிகளை சந்தித்து ஆலோசனைகள் வழங்குகின்றனர்.

    சென்னை:

    காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக நடப்பு நிதியாண்டில் தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகள் விவசாயிகள் மூலம் நட திட்டமிடப்பட்டுள்ளது. 30-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் உள்ள ஈஷா நர்சரிகளில் தரமான டிம்பர் மரக்கன்றுகள் வெறும் 3 ரூபாய்க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநில கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று (ஜூலை 22) கூறியதாவது:

    2019-ம் ஆண்டு சத்குருவால் தொடங்கப்பட்ட காவேரி கூக்குரல் இயக்கம் தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அவரின் தொடர் விழிப்புணர்வு பயணங்கள் மற்றும் இவ்வியக்கத்தின் களப் பணியாளர்களின் முயற்சியால் விவசாய நிலங்களில் மரம் வளர்க்கும் ஆர்வம் விவசாயிகளிடம் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக, மரக்கன்றுகள் விநியோகமும் ஆண்டுதோறும் அதிகரித்து கொண்டே வருகிறது.

    அதன்படி, நடப்பு நிதியாண்டில் (2022- 2023) தமிழ்நாட்டில் 1 கோடி மரக்கன்றுகளை விநியோகப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே இருக்கும் 30 நர்சரிகளுடன் சேர்த்து கூடுதலாக 12 புதிய நர்சரிகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிதியாண்டில் ஏற்கனவே 20 லட்சம் மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    மண்ணின் வளத்தை அதிகரிப்பதிலும், குறைந்த நீரில் அதிக விளைச்சல் எடுப்பதற்கும் மரங்கள் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கின்றன. தொடர் கனமழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் போது பயிர்களின் சேதத்தை குறைப்பதிலும் மரங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இதுபோன்ற சுற்றுச்சூழல் மேம்பாட்டுகளுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை காவேரி கூக்குரல் இயக்கம் பிரபலப்படுத்தி வருகிறது.

    வழக்கமான பயிர்களுடன் சேர்த்து வரப்போரங்களில் அல்லது பயிர்களுக்கு இடையில் அல்லது நிலம் முழுவதும் என பல்வேறு வழிகளில் மரங்கள் வளர்க்க விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது. குறிப்பாக, தேக்கு, செம்மரம், சந்தனம், வேங்கை, மலைவேம்பு, மஞ்சள் கடம்பு போன்ற டிம்பர் மரங்களை வளர்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பெரும் தொகை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயாக கிடைக்கும்.

    இதற்காக காவேரி கூக்குரல் இயக்கத்தின் களப் பணியாளர்கள் தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளை நேரில் சந்தித்து இலவச ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். மேலும், அவர்களின் நிலங்களுக்கு நேரில் சென்று மண்ணின் தன்மை மற்றும் நீரின் தரத்தை பரிசோதித்து மண்ணுக்கேற்ற மரங்களை பரிந்துரைத்து வருகின்றனர்.

    இதுமட்டுமின்றி, மரம் சார்ந்த விவசாய முறைகளை விவசாயிகள் நேரடியாக பார்த்து கற்றுக்கொள்ளும் விதமாக முன்னோடி விவசாயிகள் தோட்டங்களில் நேரடி களப் பயிற்சிகளும் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஜூலை 24-ம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் முன்னோடி விவசாயி தெய்வசிகாமணியின் தோட்டத்தில் பிரம்மாண்ட களப் பயிற்சி நடைபெற உள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். அவர்களுக்கு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முன்னோடி விவசாயிகள் பயிற்சி அளிக்க உள்ளனர். இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயிகள் 9442590079, 9442590081 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் செங்கல்பட்டு விவசாயி சுரேஷ் குமார், திருவள்ளூர் விவசாயி ஜெயச்சந்திரன் ராணிப்பேட்டை விவசாயி உமா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

    Next Story
    ×