search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேலாயுதம்பாளையம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனை விதை நடவு செய்த தொழிலதிபர்
    X

    தொழிலாளர்கள் பனை விதை நடவு செய்வதை காணலாம்.

    வேலாயுதம்பாளையம் அருகே 10 ஏக்கர் நிலப்பரப்பில் பனை விதை நடவு செய்த தொழிலதிபர்

    • பனை மரமானது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது.
    • கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

    வேலாயுதம்பாளையம்:

    பூலோகத்தின் கற்பகத்தரு என்று போற்றப்படுவது பனைமரம். இம்மரம் சங்க காலத்தில் இருந்து தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டற கலந்திருந்தது. இதன் வேர் முதல் நுனி வரை அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் சிறு உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது.

    இதன் வேர் பகுதி விறகாகவும், சேவு நிறைந்த தண்டுப்பகுதி வீடு கட்ட சட்டங்களாகவும், அதன் மட்டையிலிருந்து கயிறு தயாரிக்க பயன்படும் நாரும், ஓலை கூரை வேயவும், தடுப்பு கட்டவும், வறட்சி காலத்தில் கால்நடைகளுக்கு தீவனமாகவும் பயன்படுகிறது.

    மேலும் கூடை, விசிறி, பாய், தொப்பி போன்ற பலவித கலை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

    அதேபோல் பனை மரம் மருத்துவ குணம் நிறைந்த பதநீர், கள், உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய கூடிய நொங்கு, பனம்பழம், பனங்கொட்டை, நார்சத்து மிகுந்த பனங்கிழங்கு ஆகியவற்றை தருவதுடன் பதநீரில் இருந்து பனைவெல்லம், கற்கண்டு ஆகியவையும் தயாரிக்கிறார்கள்.

    இவ்வாறு பனை மரமானது மனித வாழ்வுக்கு தேவையானவைகளில் பெரும்பாலானவற்றை தந்தது. இதனால் அவற்றை நம் முன்னோர்கள் அனைத்து இடங்களிலும் நடவு செய்து பாதுகாத்தனர்.

    காலச்சக்கரத்தில் கற்பக தரு பல இடங்களில் காணாமல் போய்விட்டது. இன்று கிராமங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சில பனைமரங்களே உள்ளன.

    இந்நிலையில் பனை மரத்தை அழிவில் இருந்து காக்க வேண்டும் என்பதற்காக அரசும், சில தனியார் தொண்டு நிறுவனங்களும் பனை மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் ஏற்படுத்தி வருகின்றன. அதனால் ஒரு சிலர் பனை விதைகளை நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    அந்த வகையில் கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தை சேர்ந்த அன்புநாதன் பனை மரம் நடவு செய்ய முன்வந்தார்.

    தொழிலதிபரும் விவசாயியுமான இவருக்கு சேங்கல்மலை அருகே 10 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது.

    இதில் மண்மங்கலத்தை சேர்ந்த பனைமர ஆர்வலர் ராமசாமி மற்றும் பசுமை தளவை இயக்க செயலாளர் அரவிந்தன் ஆகியோர் ஒத்துழைப்புடன் 4 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளார்.

    இதுகுறித்து அன்புநாதன் கூறும்போது,

    இன்று தென்னையை விட அதிகம் லாபம் தரக்கூடியது பனைமரம். தென்னை ஏக்கருக்கு 70 மரம்தான் வைக்க முடியும். ஆனால் பனை 400 மரம் வைக்கலாம்.

    ஒரு தேங்காய் ரூ.10 வரை தான் விற்பனை ஆகிறது. ஆனால் நொங்கு ஒரு சுளை ரூ.10வீதம் ஒரு காய் ரூ.30 முதல் 50 வரை விற்பனை ஆகிறது.

    அதேபோல் பதநீர், கருப்பட்டி ஆகியவற்றின் தேவையும், விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மேலும் தென்னை மரத்திற்கு தொடர்ந்து நீர் பாய்ச்சுவதுடன் உழவு, குப்பை, உரம் என்று தொடர்ந்து பராமரிப்பு செலவு செய்ய வேண்டும்.

    ஒரு வருடம் கடும் வறட்சி வந்தாலும் பல வருடங்கள் பாதுகாத்த தென்னந்தோப்பு முற்றிலும் அழிந்து விடும். ஆனால் பனை மரம் மானாவாரி பயிர், வறட்சி, வெள்ளம் என்று எந்த சுழலையும் தாங்கி வளரக்கூடியது. பராமரிப்பு செலவு எதுவும் இல்லை. லாப நோக்கில் பார்த்தால் தென்னை மரத்தை விட இன்று பனை மரமே சிறந்தது. நமது பாரம்பரியத்தின் அடையாளமான பனை மரம் சுற்றுசூழலை பாதுகாப்பது டன் நிலத்தடி நீரையும் பாதுகாக்கிறது என்றார்.

    பனை விதை நடவு செய்த விவசாயி அன்புநாதனை இயற்கை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×