search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பவானிசாகர் அணைக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு: 3 நாட்களில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது
    X

    பவானிசாகர் அணைக்கு 31 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்பு: 3 நாட்களில் நீர்மட்டம் 5 அடி உயர்ந்தது

    • கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
    • கனமழை காரணமாக பவானி சாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

    கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்காக அதிக அளவில் நீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வந்தது.

    இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    மேலும் கோவை மாவட்டம் பில்லூர் அணையிலிருந்து நீர்மின் உற்பத்திக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 70.96 அடியாக உள்ளது. கடந்த 3 நாட்களில் பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 5 அடி வரை உயர்ந்துள்ளது.

    அணைக்கு வினாடிக்கு 31 ஆயிரத்து 939 கன அடியாக தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக பவானி சாகர் அணியில் இருந்து பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.

    பலத்த மழையால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதைப்போல் மாவட்டத்தில் உள்ள மற்ற அணைகளும் நிரம்பி வருகின்றன.

    குண்டேரி பள்ளம் அணையின் நீர்மட்டம்-28.56, பெரும்பள்ளம் அணையின் நீர்மட்டம்-5.93, வரட்டு பள்ளம் அணையின் நீர்மட்டம் -27.07 அடியாக உள்ளது. தொடர்ந்து மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

    Next Story
    ×