search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே பானி பூரி குடோனில் பேட்டரி வெடித்து பயங்கர தீ விபத்து
    X

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே பானி பூரி குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டிருந்த காட்சி

    மீனாட்சி அம்மன் கோவில் அருகே பானி பூரி குடோனில் பேட்டரி வெடித்து பயங்கர "தீ" விபத்து

    • விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது.
    • தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் திரும்பிய திசையெல்லாம் பானி பூரி உள்ளிட்ட வடமாநில உணவு வகைகள் தள்ளுவண்டிகளிலும், குடை அமைத்தும், கடைகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை பள்ளி, கல்லூரி மாணவர்கள் முதல் பெரியோர்கள் வரை விரும்பு சாப்பிடுகிறார்கள்.

    இதில் பெரும்பாலும் வடமாநிலத்தவர்களே ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக அவர்கள் மதுரையின் பல்வேறு இடங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து அங்கேயே உணவு வகைகளை தயாரித்து காலை, மாலை நேரங்களில் பானிபூரி விற்பனை செய்கின்றனர்.

    அந்த வகையில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே வடக்கு மாசி வீதி ராமாயணம் சாவடி அருகே உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நேபால் சிங் என்ப வர் தலைமையில் 20-க்கும் மேற்பட்டோர் வீடு எடுத்து தங்கி மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பானி பூரி விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்குள்ள முதல் மாடியில் 3 பேட்டரிகளை சார்ஜ் ஏற்றுவதற்காக மின்சாரத்துடன் இணைத்து வைத்திருந்தனர். இந்தநிலையில் இன்று காலை சுமார் 10 மணி அளவில் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஒரு பேட்டரி வெடித்துச் சிதறியது. இதனால் முதல் மாடியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    விபத்துக்குள்ளானது ஓட்டு வீடு என்பதாலும், அந்த பகுதியில் காற்று பலமாக வீசியதாலும் தீயானது மளமளவென்று பரவியது. மேலும் அந்த பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது.

    இதுபற்றி அப்பகுதியினர் கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்த பெரியார் நிலைய தீயணைப்பு துறையினர் மாவட்ட உதவி அலுவலர் சுரேஷ் கண்ணன் தலைமையில் சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீ விபத்து தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மேல் மாடியில் இருந்த பொருட்கள் அனைத்து எரிந்து சேதமடைந்தது.

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் உள்ள வசந்தராயர் மண்டபத்தில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து அடுத்த டுத்து தெற்கு மாசி வீதியில் உள்ள பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ விபத்து, தற்போது பானி பூரி தயாரிக்கும் வடமாநிலத்தவர் தங்கியிருந்த வீட்டில் பேட்டரி வெடித்து தீ விபத்து என நீண்டு கொண்டே செல்வது மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மத்தியிலும், அப்பகுதியைச் சேர்ந்த வணிக நிறுவனத்தினர் மற்றும் பொதுமக்கள் இடையேயும் அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×