search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
    X

    குற்றாலம் அருவிகளில் குளிக்க இன்று காலை முதல் அனுமதி- சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

    • கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது.
    • இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது.

    தென்காசி:

    தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக கருதப்படுவது தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் ஆகும்.

    தென்மேற்கு பருவமழை காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும். ஆனால் இந்த ஆண்டிற்கான சீசன் தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது.

    கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த வாரம் தொடங்கியது. தென்காசியில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை பெய்ததால் வறட்சியுடன் காணப்பட்ட ஐந்தருவி மற்றும் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத் தொடங்கியது.

    நேற்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடனும், இதமான காற்றும் வீசி வந்த நிலையில் மாலை 4 மணிக்கு திடீரென மேகக் கூட்டங்கள் திரண்டு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் குற்றாலம், தென்காசி பகுதியில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடியுடன் கூடிய மழை பெய்தது.

    இதேபோல் செங்கோட்டை, குண்டாறு, அடவிநயினார் அணைப்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது. இதனால் குற்றாலம் ஐந்தருவி மற்றும் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் ஐந்து கிளைகளிலும் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை தாண்டியும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் குளிக்க உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    இரவில் மழைப்பொழிவு குறைந்ததை அடுத்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்தது. இதனால் இன்று காலை முதல் ஐந்தருவி, மெயின் அருவியில் சீராக தண்ணீர் விழ தொடங்கியது. இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

    குற்றால சீசன் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்து இருந்த சுற்றுலா பயணிகள் இன்று காலை முதல் ஆர்வமுடன் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குவிந்து வருகின்றனர். அவர்கள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்து வருகின்றனர். எனினும் பழைய குற்றாலம், புலி அருவி, சிற்றுருவி பகுதிகள் வறட்சியுடனே காணப்பட்டு வருகிறது.

    இன்று காலை முதல் குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குளிர்ந்த காற்று தொடர்ந்து வீசி வருவதால் தொடர்ந்து சாரல் மழை பெய்யக்கூடும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இன்றும் தொடர் சாரல் மழை பெய்தால் சிற்றுருவி, புலி அருவி மற்றும் பழைய குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×