search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆருத்ரா நிறுவனம் ரூ.2,400 கோடி சுருட்டல்: ஆர்.கே.சுரேசிடம் போலீசார் அதிரடி விசாரணை
    X

    ஆருத்ரா நிறுவனம் ரூ.2,400 கோடி சுருட்டல்: ஆர்.கே.சுரேசிடம் போலீசார் அதிரடி விசாரணை

    • ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்.
    • மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர்.

    சென்னை:

    சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஆருத்ரா நிதி நிறுவனம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றி பண வசூலில் ஈடுபட்டது. 1 லட்சம் பேரிடம் ரூ.2,400 கோடி அளவுக்கு ஆருத்ரா நிறுவனம் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இந்த வழக்கில் சிக்கிய ஒருவரிடம் நடிகர் ஆர்.கே.சுரேஷ் பணம் பெற்றிருப்பதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இதை தொடர்ந்து ஆர்.கே.சுரேசிடம் விசாரணை நடத்துவதற்காக போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பினார்கள்.

    ஆனால் ஆர்.கே.சுரேஷ் துபாயில் தலைமறைவானார். இதையடுத்து அவருக்கு எதிராக அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் லுக் அவுட் நோட்டீசை பிறப்பித்தனர்.

    இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர்ட்டில் நடைபெற்றபோது, ஆர்.கே.சுரேஷ் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் ஆர்.கே.சுரேசை கைது செய்யும் சூழல் உள்ளது. ஆனால் அவர் விரைவில் சென்னை திரும்பி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.

    இதன்படி ஆர்.கே.சுரேஷ் நேற்று முன்தினம் துபாயில் இருந்து சென்னை திரும்பினார். இந்த நிலையில் அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் அவர் ஆஜரானார். ஆர்.கே.சுரேசிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    மோசடி விவகாரம் தொடர்பாக சரமாரி கேள்விகளை கேட்டு போலீசார் ஆர்.கே.சுரேசை துளைத்தெடுத்தனர். அப்போது அவர் தெரிவித்த தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர்.

    இதன் அடிப்படையில் அடுத்த கட்ட விசாரணை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்.கே. சுரேஷ், பெரிய மீசை தாடியுடன் காணப்படுவார். பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் ஆஜராக வந்த அவர் மொட்டையடித்து லேசாக முடி வளர்த்த நிலையில் காணப்பட்டார்.

    Next Story
    ×