search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறிய ஆந்திர பக்தர்களால் திடீர் மோதல்: தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு
    X

    புகார் கொடுக்க வந்த ஆந்திர ஐயப்ப பக்தர்கள். 

    ஸ்ரீரங்கம் கோவிலில் அத்துமீறிய ஆந்திர பக்தர்களால் 'திடீர்' மோதல்: தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு

    • வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர்.

    திருச்சி:

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் இருந்து, 30-க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் நேற்று சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

    பின்னர் அவர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது ஆந்திர ஐயப்ப பக்தர்கள் சிலரும் தரிசனம் செய்ய வந்தனர்.

    ஆந்திர பக்தர்கள் வரிசையில் நிற்காமல் இடையே அத்துமீறி நுழைந்ததாக தெரிகிறது. சிலர் தடுப்பு கம்பியை தாண்டி குதித்தனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டது.

    இதனால் மற்ற பக்தர்கள் கோவில் காவலாளிகளிடம் புகார் கூறினர். பின்னர் கருவறைக்கு முன்புறமுள்ள காயத்ரி மண்டபத்தில் ஆந்திர பக்தர்கள் நின்று கொண்டிருந்த போது நெரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது.

    காவலாளிகள் அதை சரிசெய்ய முயன்றனர். அப்போது வரிசையில் நின்ற ஆந்திர பக்தர் சென்னா ராவ் என்பவருக்கும், கோவில் காவலாளிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அது கைகலப்பாக மாறியது.

    இதில் ஐயப்ப பக்தர் சென்னாராவின் மூக்கு உடைபட்டு ரத்தம் கொட்டியது. இதனால் அதிர்ச்சி அடைந்த நபர் ரத்தத்தை துடைத்து கொண்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதைப் பார்த்த ஆந்திரா ஐயப்ப பக்தர்கள் கூச்சலிட்டனர்.

    உடனே தகவல் அறிந்த மாநகர காவல் உதவி ஆணையர் நிவேதா லட்சுமி, ஆய்வாளர் அரங்க நாதன் உள்ளிட்டோர் கோவிலுக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திர பக்தர்களை அமைதிப்படுத்தி அழைத்து சென்றனர்.

    இது குறித்து கோவில் காவலாளி பரத் உள்பட 3 பேர் மீது ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் புகார் கொடுத்துள்ளனர். அதே போல கோவில் காவலாளிகள் தரப்பிலும், ஐயப்ப பக்தர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது. கோவிலுக்குள்ளே பக்தர் ரத்தம் சிந்தியதால் சிறிது நேரம் கோவில் நடை சாத்தப்பட்டு, பரிகார பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டது.

    Next Story
    ×