search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அண்ணா நூற்றாண்டு நூலக புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்து சென்று படிக்கலாம்
    X

    அண்ணா நூற்றாண்டு நூலக புத்தகங்களை வீடுகளுக்கு எடுத்து சென்று படிக்கலாம்

    • புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது.
    • அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆசியாவிலேயே 2-வது பெரிய நூலகம் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த நூலகம் தொடங்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆகிறது.

    இதுவரை அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு செல்பவர்கள் அங்கிருந்தே புத்தகங்களை படிக்க முடியும். மேலும் பொது மக்கள் தங்கள் சொந்த நூல்கள் மற்றும் மடிக் கணினியை கொண்டு வந்து படிப்பதற்கான தனிப்பிரிவும் உள்ளது.

    இந்நிலையில் அண்ணா நூற்றாண்டு நூலகம் திறக்கப்பட்டு 13 ஆண்டுகளுக்கு பிறகு புத்தகங்களை வாசகர்களுக்கு வழங்க உள்ளது. இனி அண்ணா நூற்றாண்டு நூலக புத்தகங்களை வாசகர்கள் வீடுகளுக்கு எடுத்து சென்று படிக்கலாம். புத்தகங்கள் வழங்கும் நடைமுறை இன்னும் 3 மாதங்களில் அமலுக்கு வர உள்ளது. 6 லட்சத்துக்கும் அதிகமான புத்தகங்களை கொண்டுள்ள இந்த நூலகம் அதில் இருந்து புத்தகங்களை வாசகர்களுக்கு கொடுக்கிறது. அங்குள்ள பிரதிகளின் எண்ணிக்கை, விலை மற்றும் கிடைக்கும் நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புத்தகங்கள் பிரிக்கப்பட்டு வாசகர்களுக்கு வழங்கப்படும். மற்றும் புத்தகங்களில் இருந்து 1 லட்சம் புத்தகங்களை மட்டும் உறுப்பினர்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    புத்தகங்களை தனித் தனியாக பிரித்த பிறகு ஒவ்வொரு தளத்திலும் உறுப்பினர்களுக்கு வழங்கும் பிரிவு தொடங்கப்படுகிறது.

    இந்த நூலகத்தில் சட்டம், மருத்துவம், பொறியியல், உளவியல், சமூகவியல், மதம், தத்துவம் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் முன்னணி வெளியீட்டாளர்களின் புத்தகங்கள் அதிக அளவில் உள்ளன.

    பிரெய்லி பிரிவில் 1500 புத்தகங்கள் உள்ளன. தற்போது உறுப்பினர் கட்டணம் ரூ.2500 ஆகும். ஆண்டு சந்தா கட்டணம் ரூ.100 ஆகும்.

    இந்த நூலகம் குடும்ப உறுப்பினர்களுக்கு சலுகைகளையும், முதியோர்கள் மற்றும் மாணவர்களுக்கு குறைந்த கட்டணங்களையும் விதிக்க உள்ளது. அதிக உறுப்பினர்களை ஈர்க்க, அனைத்து உறுப்பினர்களுக்கும் கட்டணத்தை ரூ.100-க்கு கீழ் குறைக்கவும் திட்டமிட்டுள்ளது.

    மேலும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் 300 பேர் பார்க்கும் வகையிலான திறந்தவெளி தியேட்டரும் விரைவில் திறக்கப்பட உள்ளது.

    இதில் நாடகம், இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வசதியாக இருக்கும். விரைவில் கூடுதல் புத்தகங்களையும் அதன் இ-புத்த கங்களின் சேகரிப்பையும் தொடங்க உள்ளது. மேலும் இங்கு கேண்டீன் தொடங்குவதற்கான டெண்டர் பணிகளும் நடந்து வருகிறது.

    Next Story
    ×