search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அங்கன்வாடி மையத்தில் வித்தியாசமான முறையில் குழந்தைகளை வரவேற்கும் பெண் ஊழியர்

    • தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன.
    • அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    சிறிய குழந்தைகள் அங்கன்வாடி மையத்துக்கு செல்ல மறுத்து வீட்டில் அழுது புரண்டு அடம்பிடிப்பது வழக்கம். குழந்தைகளை பெற்றோர் தூக்கிச்சென்று அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்வதை பெரும்பாலும் காண முடியும். குழந்தைகளும் வேறு வழியில்லாமல் அங்கன்வாடி ஊழியருக்கு பயந்து அங்கே இருந்து பொழுதை கழித்து செல்வார்கள்.

    ஆனால் திருவள்ளூரில் உள்ள ஒரு அங்கன்வாடி மையத்துக்கு குழந்தைகள் உற்சாகத்துடனும், சிரித்த முகத்துடன் போட்டி போட்டு வந்து செல்கிறார்கள். இதற்கு அங்குள்ள அங்கன்வாடி பெண் ஊழியரின் கனிவான உபசரிப்பு மற்றும் வரவேற்கும் விதம் காரணமாக உள்ளது. இந்த உபசரிப்பு அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

    திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 1760 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தனியார் பள்ளிக்கு நிகராக அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த "ஸ்மைல்" என்ற புதிய திட்டத்தை மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்து உள்ளார். இது மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு மற்றும் முன்பள்ளிக் கல்வியில் ஆதரவளிக்கும் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதில் தனியார் நர்சரி பள்ளிகளுக்கு இணையாக மாவட்டத்தில் 925 அங்கன்வாடி மையங்கள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. குழந்தைகள் உட்கார நாற்காலி வசதி, விளையாட்டு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் மற்றும் அடிப்படை கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த திருவலாங்காடு சின்னம்மா பேட்டையில் உள்ள அங்கன்வாடி மையத்தில் ஊழியராக பணியாற்றி வரும் ருக்மணிதேவி என்பவர் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை வித்தியாசமாக வரவேற்கும் வீடியோ காட்சி தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அங்கன்வாடி மையத்துக்கு வரும் குழந்தைகளை கை குலுக்குதல், வணக்கம் தெரிவித்தல், கட்டி அணைத்தல், கைகளால் "பஞ்ச்" கொடுப்பது என வித்தியாசமான முறையில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறார். குழந்தைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் அங்கன்வாடி மையத்துக்கு துள்ளி குதித்தபடி செல்கிறார்கள்.

    மேலும் குழந்தைகள் தங்களை வரவேற்கும் விதத்தை தேர்வு செய்யும் வகையில் அங்கன்வாடிமைய அறையின் வாசல் முன்பு இதற்காக கை குலுக்குதல், கட்டி அணைத்தல், வணக்கம் தெரிவித்தல், கைகளால் பஞ்ச் ஆகியவை அடங்கிய வரைபடம் ஒட்டப்பட்டு உள்ளது.

    இதில் ஒன்றை குழந்தைகள் தேர்வு செய்ததும் அதன்படி அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவி வரவேற்று அனுப்புகிறார். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைக்கின்றனர். தற்போது சமூக வலைதளத்தில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

    இந்த வீடியோவை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். குழந்தைகளை வரவேற்கும் அங்கன்வாடி ஊழியர் ருக்மணிதேவியை அவர் பாராட்டி உள்ளார்.

    இதுகுறித்து அங்கன்வாடி ஊழியர் ருக்மணி தேவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அங்கன்வாடி மையத்துக்கு காலையில் வரும் குழந்தைகளை எப்போதும் இதுபோல் தான் வரவேற்பேன். இதனால் குழந்தைகள் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் காரணமாக குழந்தைகளுடன் நெருக்கமா இருக்க முடியும். இங்கு மொத்தம் 25 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் சந்தோஷமாக வரும்போது பெற்றோருக்கும் மிகவும் நம்பிக்கை ஏற்படும்.

    தற்போது இந்த அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×