என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
பெருந்துறை அருகே டோல்கேட் பகுதியில் டேங்கர் லாரியில் கியாஸ் கசிவு ஏற்பட்டதால் பரபரப்பு
- டேங்கர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பெருந்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
- கோவை-சேலம் பைபாஸ் சாலையில் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினர்.
பெருந்துறை:
கேரள மாநிலம் கொச்சினிலிருந்து மும்பைக்கு எளிதில் தீ பற்றக்கூடிய ப்ரோப்லின் கியாஸ் ஏற்றிக் கொண்டு ஒரு டேங்கர் லாரி புறப்பட்டது. இதை அக்ரம்கான் (45) என்பவர் ஓட்டி வந்தார்.
டேங்கர் லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் டோல்கேட் பகுதியில் வந்த போது டேங்கர் லாரியின் பின்பகுதியில் கியாஸ் அழுத்தம் அளவீடு செய்யும் மீட்டர் உடைந்து அதன் வாழ்வு வழியாக கியாஸ் வெளியேறியது. இதை பார்த்த மற்ற டிரைவர்கள் டேங்கர் லாரி டிரைவர் அக்ரம்கானிடம் தெரிவித்தனர்.
உடனடியாக அவர் டேங்கர் லாரியை ரோட்டோரம் நிறுத்தி விட்டு பெருந்துறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பெருந்துறை கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், இன்ஸ்பெக்டர் மசுதா பேகம், தீயணைப்பு நிலைய அலுவலர் நவீன்தரன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
பின்னர் அவர்கள் கோவை-சேலம் பைபாஸ் சாலையில் உடனடியாக போக்குவரத்தை நிறுத்தினர். தொடர்ந்து கியாஸ் கசிவு ஏற்பட்ட லாரியை போக்குவரத்து இல்லாத பொன்முடி பிரிவு சாலையில் நிறுத்தினர். டேங்கர் லாரி அருகே யாரும் செல்லாத வகையில் பாதுகாப்பு போடப்பட்டது.
கியாஸ் கசிவு குறித்து டேங்கர் லாரி டிரைவர் மும்பையில் உள்ள கம்பெனிக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு இருந்து தனஞ்சை என்ற என்ஜினீயர் விமானம் மூலம் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அவர் அங்கிருந்து பெருந்துறைக்கு விரைந்து வந்தார். பின்னர் அவர் 1 மணி நேரத்தில் கியாஸ் கசிவை முற்றிலும் சரி செய்தார். இதையடுத்து டேங்கர் லாரி மீண்டும் புறப்பட்டு சென்றது.








