search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பைக்கில் பட்டாசு வெடித்தவாறு சாகசம்: 11 வாலிபர்கள் கைது- லைசன்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை
    X

    பைக்கில் பட்டாசு வெடித்தவாறு சாகசம்: 11 வாலிபர்கள் கைது- லைசன்ஸ் ரத்து செய்ய நடவடிக்கை

    • வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.
    • பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    திருச்சி:

    திருச்சியில் ஆங்காங்கே இளைஞர்கள் பைக் சாகசங்களில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அதிவேக பைக்குகளில் வீலிங் உள்ளிட்ட சாகசங்களில் ஈடுபடுவதும், இதனை வீடியோவாக பதிவு செய்து, இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்அப் பக்கங்களில் பதிவிட்டு பெருமைபட்டு கொள்வதும் வாடிக்கையாகி வருகிறது. இந்த வீடியோக்களுக்கு அதிகளவு லைக்குகளும், கமாண்டுகளும் வருவதால் இளைஞர்கள் இவ்வாறு வீடியோ பதிவிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். போலீசார் எத்தனை முறை அறிவுரைகள் கூறினாலும், இளைஞர்கள் செவிசாய்க்க மறுக்கின்றனர்.

    இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, இளைஞர் ஒருவர் தொடர்ச்சியாக கீழே இருந்து மேலே சென்று வெடிக்கும் பேன்சி ரக பட்டாசை பைக்கின் முன்புறம் பொருத்தி அதனை கொளுத்தி வெடிக்க செய்து கொண்டு பைக்கை நெடுஞ்சாலையில் ஓட்டியதும், வீலிங் செய்வது போன்ற ஒரு வீடியோ பதிவிடப்பட்டது. டெவில் ரைடர்ஸ் என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டிருந்தது. இந்த வீடியோ வைரல் ஆகியது.

    முதலில் இது எங்கு எடுத்தது என்று தெரியாமல் இருந்த நிலையில், திருச்சி போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வீடியோ பதிவிட்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தை வைத்து திருச்சியில் எடுக்கப்பட்டது என்று உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து திருச்சி போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், பைக் சாகசத்தில் ஈடுபட்டது தஞ்சாவூர் சேர்ந்த மணிகண்டன் என்பதும், இந்த சாகசத்தை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டது திருச்சி வயலூர் ரோடு குமரன் நகர், கல்லாங்காடு பகுதியை சேர்ந்த அஜய்(வயது 24) என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில் பைக் ரைடர்ஸ் மணிகண்டன் அவரது நண்பர் அஜய் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் திருச்சியை சேர்ந்த அஜய் கைது செய்யப்பட்டார். மணிகண்டனை போலீசார் தேடி வருகின்றனர்.

    திருச்சியில் பட்டாசுகளை வைத்து வீலிங் செய்யும் சாகசத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, எஸ்.பி. வருண்குமார் உத்தரவிட்டதை தொடர்ந்து கோட்டை போலீஸ் ஸ்டேஷன் உட்பட்ட சாலையில் வீலிங்கில் ஈடுபட்ட சிந்தாமணி டைமண்ட் பஜார் பகுதியை சேர்ந்த உசேன் பாஷா(வயது 24), காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள பால்பண்ணை முதல் செந்தண்ணீர்புரம் பகுதியில் உள்ள சாலையில் வீலிங் செய்த தாரநல்லூர் ராஜேஷ்(24) ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இதே போல புறநகர் பகுதியில் ஜீயபுரம், லால்குடி, சமயபுரம், கானகிளியநல்லூர் ஆகிய 4 காவல் நிலையங்களில் வாக்கு பதியப்பட்டு உள்ளது. இப்பகுதிகளில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட பர்ஷத் அலி(24 ), அஜித் (22) சக்திவேல், விஜய், வசந்தகுமார், அருள் முருகன், பெருமாள், கிரீஷ்குமார், அஜீத்குமார் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கைதான 11 பேரின் லைசென்சை ரத்து செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    Next Story
    ×