search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காட்பாடி ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்ட தாய் சிக்கினார்- வறுமையால் விட்டு சென்றதாக கண்ணீர்
    X

    காட்பாடி ரெயில் நிலையத்தில் குழந்தையை தவிக்க விட்ட தாய் சிக்கினார்- வறுமையால் விட்டு சென்றதாக கண்ணீர்

    • பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.
    • நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    வேலூர்:

    சேலம் ஆட்டையாம் பட்டியை சேர்ந்தவர்கள் சுந்தரி (வயது 63), சிவகுமார் (43). இவர்கள் இருவரும் வேலை சம்பந்தமாக காட்பாடிக்கு வந்தனர்.

    சேலத்துக்கு செல்வதற்காக நேற்று முன்தினம் மாலை காட்பாடி ரெயில் நிலையத்திற்கு சென்றனர். ரெயிலுக்காக 1-வது பிளாட்பாரத்தில் நின்றிருந்தனர்.

    அப்போது 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் 3 மாத பெண் கைகுழந்தையை அவர்களிடம் கொடுத்து விட்டு சென்றுவிட்டார்.

    பெண் திரும்பி வராததால் அவர்கள் ரெயில்வே போலீசாரிடம் குழந்தையை ஒப்படைத்தனர். குழந்தை அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    பெண்ணை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டது. வேலூர், காட்பாடியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அடையாளம் தெரியாத பெண் காட்பாடி பஸ் நிலையத்தில் இருந்து வேலுார் பஸ் நிலையம் சென்று அங்கிருந்து ஆரணி செல்லும் பஸ்சில் ஏறி பயணம் செய்தது தெரியவந்தது.

    கேமரா மூலம் கிடைத்த புகைப்படத்தை எடுத்து வாட்ஸ்அப், டிவிட்டர், பேஸ்புக் மற்றும் உள்ளுர் போலீஸ் நிலையம் மூலம் விசாரணை நடத்தினர்.

    இதில் குழந்தையை தவிக்க விட்டு சென்றது கண்ணமங்கலம் அருகே உள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்த விஜய் என்பவரது மனைவி கலைச்செல்வி (வயது27) என்பது தெரியவந்தது.

    போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்ரா தலைமையிலான போலீசார் கலைச்செல்வியை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். அப்போது குழந்தையை விட்டு சென்றதை ஒப்புக் கொண்டார்.

    எனது கணவர் விஜய் திருப்பூரில் தறி வேலை செய்து வருகிறார். மாதம் ரூ.7 ஆயிரம் ஊதியம் கிடைக்கிறது. எங்களுக்கு ஏற்கனவே 3 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த 2 மாதங்களுக்கு முன்பு 4-வதாக ஒரு பெண் குழந்தை பிறந்தது. அதை வளர்க்க போதிய வருமானம் இல்லை. வறுமையின் காரணமாக தவித்தோம்.

    ஏற்கனவே குடும்ப பெரியவர்கள் 4-வது குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என கூறி இருந்தனர்.

    என்ன செய்வது என வழி தெரியாமல் திணறினோம். இதனால் காட்பாடி ரெயில் நிலையத்தில் உள்ளவர்களிடம் குழந்தையை ஒப்படைக்க முடிவு செய்தோம். நான் குழந்தையுடன் சென்று ஒரு மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு சென்றேன் என கண்ணீர் மல்க கூறினார்.

    போலீசார் அவருக்கு அறிவுரை கூறி குழந்தையை ஒப்படைத்தனர்.

    துரிதமாக செயல்பட்டு 24 மணி நேரத்திற்குள் காட்பாடி ரெயில் நிலையத்தில் மூதாட்டியிடம் குழந்தையை கொடுத்து சென்ற பெற்றோரை கண்டுபிடித்த தனிப்படையினரை ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு பொன்ராமு, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

    Next Story
    ×