search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை அருகே 8-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
    X

    வல்லவன் கோட்டையில் பல ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்கள்.

    நெல்லை அருகே 8-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு

    • வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
    • வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சந்திரசேகரின் முயற்சியில் முதுகலை தொல்லியல் துறை பட்டப்படிப்பு இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட்டது.

    இந்த படிப்பில் 25 மாணவ-மாணவிகள் இப்போது படித்து வருகின்றனர். பேராசிரியர் சுதாகர் இந்த துறையின் தலைமை பொறுப்பை ஏற்று பணியாற்றி வருகிறார்.

    தொல்லியல் துணைப் பேராசிரியர் முருகன் மற்றும் துணைப் பேராசிரியர் மதிவாணன், முறைப்படி இந்த மாணவர்களுக்கு தொல்லியல் நுட்பங்களை கற்பித்து வருகின்றனர்.

    வல்லவன் கோட்டை என்ற கிராமம் பல்கலைக்கழகத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

    இந்த கிராமத்திலிருந்து சுகன்யா என்ற மாணவி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முதுகலை தொல்லியல் பட்டப்படிப்பு தொடர்ந்து வருகின்றார்.

    மாணவி சுகன்யா வகுப்பறையில் பேராசிரியர்கள் கற்றுக்கொடுத்த நுட்பத்தைப் பயன்படுத்தி வல்லவன் கோட்டையில் ஒரு பழமையான கல்வெட்டைக் கண்டுபிடித்தார்.

    இதனைப் பற்றி ஆய்வு செய்ய இந்த துறை பேராசிரியர்கள் மற்றும் தொல்லியல் படிக்கும் மாணவ-மாணவிகளும் வல்லவன் கோட்டைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்பு குழுவினர் கூறியதாவது:-

    இந்த கல்வெட்டு இவ்வூருக்கு வெளியே மாடசாமி கோவிலில் உள்ளது. இந்த கல்வெட்டில் சந்தன மற்றும் குங்கும திலகமிட்டு கோட்டை மாடசாமி என்ற பெயரில் மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    அதாவது வட்டெழுத்து கல்வெட்டை கடவுளாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்தக் கல்வெட்டு கி.பி. 8 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. அதாவது 1228 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கண்டறிந்தனர். தமிழ் என தங்கள் குழந்தைகளுக்கு பெயரிட்டு மகிழும் தமிழ் சமூகம் இவ்வளவு பழமையான தமிழ் கல்வெட்டை மக்கள் வணங்குவதில் வியப்பேதும் இல்லை.

    மேலும் இந்த கோவிலுக்கு வடமேற்கே ஒரு கல்வட்டம் உள்ளது. கல்வட்டம் என்பது பல ஈமத்தாழிகளைப் புதைத்த இடம். இந்த இடத்தை அடையாளப்படுத்த தாழியைப் புதைத்த இடத்தைச் சுற்றி பெரிய பாறைகளால் ஒரு வட்டத்தை நம் முன்னோர்கள் உருவாகுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆனால் இந்த கோவில் அருகே உள்ள இந்த வட்டக்கல் வட்டமாக இல்லை.

    மாறாக இது செவ்வக வடிவமாக உள்ளது. இது சுமார் 6 சென்ட் பரப்பளவில் சதுர வடிவில் பெரிய கருங்கல் பாறைகளால் இதனை உருவாக்கியுள்ளனர்.

    இந்த அமைப்பு சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×