search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சேலம் மாவட்டத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி 75 சதவீதம் சரிவு
    X

    சேலம் மாவட்டத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி 75 சதவீதம் சரிவு

    • சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • ஆண்டு முழுவதும் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி இருக்கும்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கொலுசுகளுக்கு தனி மவுசு உண்டு என்பதால் இதனை வியாபாரிகள் போட்டி போட்டு வாங்கி செல்கிறார்கள்.

    சேலம் செவ்வாய்பேட்டை, திருவாகவுண்டனூர், கந்தம்பட்டி, சிவதாபுரம், திருமலைகிரி உட்பட பல்வேறு இடங்களில் வெள்ளிப் பொருட்கள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு வெள்ளி கால் கொலுசு, அரங்கான் கொடி, குங்குமச்சிமிழ், சில்வர் தட்டு, குடம் உள்பட பல்வேறு வகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால் கொலுசு தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கும் வெளி மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் ஆண்டு முழுவதும் சேலத்தில் வெள்ளி பொருட்கள் உற்பத்தி இருக்கும். சமீபகாலமாக தங்கத்தை போலவே வெள்ளியின் விலை அடிக்கடி மாற்றம் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து தொடர்ந்து முகூர்த்தங்கள் இருந்தது. இதன் காரணமாக வழக்கத்தை விட வெள்ளியில் விற்பனை அதிகரித்தது. தற்போது ஆடி மாதம் தொடங்கியுள்ளது. எப்போதும் ஆடி மாதத்தில் ஜவுளி, தங்கம் வெள்ளி பொருட்கள் விற்பனை குறையும். மேலும் ஆடியில் முகூர்த்தங்கள் இருக்காது. இது போன்ற காரணங்களால் கடந்த சில நாட்களாக வெள்ளி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வெள்ளி கொலுசு உற்பத்தி கைவினை சங்கத் தலைவர் ஆனந்தராஜன் கூறியதாவது, சேலம் வெள்ளி பொருட்களுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்பு இருக்கிறது.சேலம் வெள்ளி எளிதில் கருக்காது, தீபாவளி உட்பட வட மாநிலங்களில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை காலங்களில் விற்பனை அதிகரிக்கும்.தமிழகத்தில் பொங்கல் மற்றும் ஊர் திருவிழாக்களின் போது விற்பனை அதிகரிக்கும்.

    இந்த நிலையில் கடந்த சித்திரை, வைகாசி, ஆனியில் பத்துக்கும் மேற்பட்ட முகூர்த்தங்கள் வந்தது. தொடர் முகூர்த்தம் காரணமாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வெள்ளி பொருட்களின் விற்பனைகளை கட்டியது. குறிப்பாக வெள்ளிக்கால் கொலுசு விற்பனை வழக்கத்தை விட அதிகரித்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தமிழக மற்றும் வட மாநிலங்களில் வெள்ளி பொருட்களின் விற்பனை குறைந்துள்ளது.

    மேலும் தற்போது ஆடி மாதம் என்பதால் வெள்ளிப் பொருட்களின் விற்பனையும் சரிந்துள்ளது. அதனால் கடந்த 20 நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெள்ளி 63 ஆயிரத்திற்கு விற்ற நிலையில் தற்போது படிப்படியாக கிலோவுக்கு 6000 சரிந்து நேற்று 57 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளிப் பொருட்கள் விற்பனை சரிவால் பட்டறைகளில் உற்பத்தி 75% சரிந்துள்ளது. பட்டறைகளில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே உற்பத்தி நடக்கிறது. வேலை குறைந்ததால் தொழிலாளர்கள் போதிய வருமானம் இன்றி பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×