என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    7036 மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர நாளை வரை அவகாசம்
    X

    7036 மாணவர்கள் மருத்துவ கல்லூரிகளில் சேர நாளை வரை அவகாசம்

    • ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-து கட்ட கவுன்சிலில் தற்போது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு முதல்கட்ட கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.

    5647 எம்.பி.பி.எஸ் மற்றும் 1389 பி.டி.எஸ் இடங்களை மாணவ-மாணவிகள் தேர்வு செய்தனர். மருத்துவ இடங்களை தேர்வு செய்த மாணவர்கள் 30-ந்தேதியில் இருந்து நாளை (4-ந்தேதி) வரை கல்லூரிகளில் சேருவதற்கு அவகாசம் கொடுக்கப்பட்டது.

    எம்.எம்.சி., ஸ்டான்லி, கே.எம்.சி, செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கோவை பி.எஸ்.சி. தனியார் கல்லூரியிலும் அதிக மாணவர்கள் தேர்வு செய்து சேர்ந்துள்ளனர்.

    ஒரு மாணவர் 2 ஒதுக்கீட்டிலும் இடங்களை பெற்று இருப்பதால் 500-க்கும் மேற்பட்ட மருத்துவ இடங்கள் காலியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மாலை 5 மணிக்குள் இடங்களை தெரிவு செய்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

    அதையடுத்து 58 மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் விவரங்கள் மற்றும் சேராத காலி இடங்கள் குறித்த விவரங்களை மருத்துவ கல்வி இயக்ககம் சேகரிக்கிறது.

    அரசு ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்கள் சேகரிக்கப்பட்டு 2-வது கட்ட கலந்தாய்விற்கு பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

    இதுகுறித்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் முத்துச்செல்வன் கூறியதாவது:-

    முதல்கட்ட கலந்தாய்வில் 1 எம்.பி.பி.எஸ், 43 பி.டி.எஸ் இடங்கள் காலியாக உள்ளன. நாளை மாலைக்குள் சேராதவர்கள் விவரம் சேகரிக்கப்பட்டு அடுத்தகட்ட கலந்தாய்வில் சேர்க்கப்படும். 7-ந்தேதி 2-வது கட்ட கலந்தாய்வு நடப்பதாக இருந்தது. அது தள்ளிப்போகிறது.

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-து கட்ட கவுன்சிலில் தற்போது நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் தமிழகத்தில் 2-வது சுற்று தொடங்கும்.

    அடுத்த வாரம் இறுதியில் தொடங்குவதற்கு வாய்ப்பு உள்ளது. அதில் அனைத்து காலி இடங்களும் நிரப்பப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×